செய்திகள்

ஆமதாபாத் டி20 தொடர்: ரசிகர்களுக்கு அனுமதியில்லை!

16th Mar 2021 10:49 AM

ADVERTISEMENT

 

ஆமதாபாத்தில் நடைபெறும் மீதமுள்ள டி20 ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறுகின்றன. 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி20 ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளதால், மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது சமநிலையில் உள்ளது. எனவே தொடரில் முன்னிலை பெறுவதற்காக இந்தியா, இங்கிலாந்து அணிகள் தீவிரமாக முயற்சி செய்யும். இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் தோற்றாலும், 2-வது ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது. அந்த உத்வேகத்திலேயே 3-வது ஆட்டத்திலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் முன்பு அறிவித்தது. இந்நிலையில் மீதமுள்ள 3 டி20 ஆட்டங்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் டி20 ஆட்டத்துக்கு 67,200 பேரும் 2-வது டி20 ஆட்டத்துக்கு 66,352 பேரும் வருகை தந்தார்கள்.

டி20 தொடர் மட்டுமல்லாமல் புணேவில் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : India England
ADVERTISEMENT
ADVERTISEMENT