செய்திகள்

ஆமதாபாத் ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்யவேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை: விராட் கோலி

13th Mar 2021 11:44 AM

ADVERTISEMENT

 

பேட்டிங் திறமையைச் சரியாக வெளிப்படுத்தாததால் இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளோம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகா் தவன் சோ்க்கப்பட்டாா். இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தோ்வு செய்தது. 

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டேவிட் மலான் 20 பந்துகளில் 1 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 24, ஜானி போ்ஸ்டோவ் 17 பந்துகளில் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஆட்டம் முடிந்தபிறகு விராட் கோலி பேட்டியளித்ததாவது:

இதுபோன்ற ஆடுகளத்தில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை. நாங்கள் நினைத்த ஷாட்களைச் சரியாக விளையாட முடியவில்லை. இந்தப் பிரச்னையை நாங்கள் கவனிக்கவேண்டும். எங்களுக்கு ஏற்றாற்போல முதல் டி20 ஆட்டம் அமையவில்லை. நம் தவறுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்த ஆட்டத்தில் எந்தப் பகுதியில் ஷாட்கள் அடிக்கவேண்டும் என்பதையும் திட்டங்கள் குறித்த கூடுதல் தெளிவுடனும் களமிறங்க வேண்டும்.  

விநோதமான தொடக்கம் எங்களுக்கு அமைந்தது. நீங்கள் நினைத்த ஷாட்களை அடிக்க ஆடுகளம் உதவியது. கிரீஸை சரியாகப் பயன்படுத்தி, பவுன்சை எதிர்கொண்டு எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டம் நல்ல உதாரணம். விக்கெட்டின் ஸ்கொயர் பகுதியில் அவர் அடித்தார். அப்படி மற்றவர்கள் செய்யவில்லை. பேட்டிங் திறமையைச் சரியாக வெளிப்படுத்தாததால் இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளோம்.

இதற்கு முன்பு விளையாடிய இரு டி20 தொடர்களையும் நாங்கள் வென்றுள்ளோம். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்த 5 டி20 ஆட்டங்களை மட்டுமே நாங்கள் விளையாடுகிறோம். அதேநேரம் புதிய அணுகுமுறையையும் நாங்கள் முயற்சி செய்தாக வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக எதையும் எளிதாகச் செய்துவிட முடியாது என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT