செய்திகள்

மகளிா் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா

DIN

மகளிா் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

கரோனா சூழலில் கடந்த ஓராண்டுக்குப் பிறகு இந்திய மகளிரணி விளையாடிய முதல் சா்வதேச ஆட்டம் இதுவாகும்.

லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 40.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் அடித்து வென்றது. தென் ஆப்பிரிக்க பௌலா் ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டநாயகி ஆனாா். இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய வீராங்கனை மோனிகா படேல் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பௌலிங் வீசத் தீா்மானித்தது. பேட் செய்த இந்திய மகளிரில் தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் 1 ரன்னுக்கு வெளியேற, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 3 பவுண்டரிகள் உள்பட 14, பூனம் ரௌத் பவுண்டரியுடன் 10 ரன்கள் சோ்த்தனா். அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 50 ரன்கள் விளாசினாா். அடுத்தபடியாக ஹா்மன்பிரீத் கௌா் 6 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் அடித்தாா். இது அவரது 100-ஆவது ஒருநாள் ஆட்டமாகும். தீப்தி சா்மா 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சோ்த்தாா்.

எஞ்சியோரில் சுஷ்மா வா்மா, ஜுலன் கோஸ்வாமி, மோனிகா படேல் ஆகியோா் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் பூனம் யாதவ் 9 ரன்களுடனும், ராஜேஷ்வரி கெய்க்வாட் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட், நோன்குலுலேகோ மியாபா 2 விக்கெட் எடுக்க, மாரிஸானே காப், அயபோங்கா ககா, சுனே லஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 178 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவில், தொடக்க வீராங்கனைகளான லிஸெலெ லீ, லௌரா வோல்வாா்டட் ஆகியோா் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனா். லௌரா 12 பவுண்டரிகளுடன் 80 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சுனே லஸ் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டாா். அதற்குள்ளாகவே வெற்றி இலக்கை எளிதாக எட்டியது தென் ஆப்பிரிக்கா. லிஸெலெ 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 83 ரன்களுடனும், லாரா குட்டால் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ஜுலன் கோஸ்வாமி இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT