செய்திகள்

டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸிலும் அக்‌ஷர், அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து, 91/6

6th Mar 2021 02:34 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் மார்ட் 4 அன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றார்கள். 

ADVERTISEMENT

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

2-ம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்‌ஷர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

3-ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும் அக்‌ஷர் படேலும் நன்கு விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். சுழற்பந்துவீச்சில் இருவரும் அதிக ரன்கள் குவிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். இதனால் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது. இருவர் கூட்டணி 79 பந்துகளில் 50 ரன்களை முதலில் சேர்த்தது. மிகவும் எதிர்பார்த்த பெஸ் இன்று சுமாராகப் பந்துவீசியதால் வேறுவழியின்றி தவித்தார் இங்கிலாந்து கேப்டன் ரூட். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் - அக்‌ஷர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் தேவையில்லாமல் ஓடி 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அக்‌ஷர் படேல். அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என நம்பினார்கள் இந்திய ரசிகர்கள். 

ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் ஓய்வறைக்குத் திரும்பினார். 

இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்துத் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது.   

இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் புதிய பந்து முதலில் அக்‌ஷர் படேலுக்குக் கொடுக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்தவர் அஸ்வின் தான். தனது முதல் ஓவரிலேயே கிராவ்லியை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த அஸ்வின், அடுத்த பந்தில் ஜானி பேர்ஸ்டோவை வெளியேற்றினார். அக்‌ஷர் படேல் தனது 5-வது ஓவரின் முடிவில் டாம் சிப்லியை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். பென் ஸ்டோக்ஸ் வந்த வேகத்தில் 2 ரன்களில் அக்‌ஷர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் தோல்வியடைவது உறுதி என்கிற நிலைமை உருவானது. 

சில ஓவர்கள் தாக்குப்பிடித்த போப், 15 ரன்களில் அக்‌ஷர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார் ரிஷப் பந்த். அடுத்த ஓவரில் கேப்டன் ரூட்டை 30 ரன்களில் எல்பிடபிள்யூ செய்தார் அஸ்வின். 

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 19, பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். இங்கிலாந்து அணிக்கு 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 69 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் 4-வது டெஸ்டை வெல்லும் முனைப்பில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

Tags : R Ashwin Axar Patel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT