செய்திகள்

தொடர் நாயகன் விருது: சாதனைப் பட்டியலில் இணைந்த அஸ்வின்!

6th Mar 2021 05:41 PM

ADVERTISEMENT

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் மார்ட் 4 அன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பந்த் 101, வாஷிங்டன் சுந்தர் 96* ரன்கள் எடுத்தார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்துத் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 54.5 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. லாரன்ஸ் 50 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி டெஸ்டை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ADVERTISEMENT

டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. 

ஆட்ட நாயகன் விருது ரிஷப் பந்துக்கும் தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. இது அஸ்வினின் 8-வது தொடர் நாயகன் விருதாகும். இந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளும் ஒரு சதத்துடன் 189 ரன்களும் எடுத்துள்ளார் அஸ்வின். இதன்மூலம் தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் அஸ்வின் இணைந்துள்ளார். 

தொடர் நாயகன் விருதுகள்

முரளிதரன் - 11
காலிஸ் - 9
இம்ரான் கான் - 8
வார்னே - 8
ஹேட்லி - 8
அஸ்வின் - 8
 

Tags : ashwin Man of the series
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT