செய்திகள்

4-வது டெஸ்ட்: ரிஷப் பந்த் அபார சதம், இந்திய அணி 50 ரன்கள் முன்னிலை!

5th Mar 2021 04:31 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ரிஷப் பந்தின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 50 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை அடைந்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் மார்ட் 4 அன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றார்கள். 

ADVERTISEMENT

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. புஜாரா 15, ரோஹித் சர்மா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று இந்திய அணி நன்கு விளையாடி எப்படியும் சுலபமாக 300 ரன்களை எடுக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்றைய நாளின் முதல் பகுதி இந்திய அணிக்குக் கடினமானதாக அமைந்துவிட்டது.

முதல் ஒரு மணி நேரம் இந்திய அணி நிதானமாக ரன்கள் சேர்த்ததால் கூடுதல் அழுத்தம் கொடுக்க இங்கிலாந்து அணிக்கு வசதியாகப் போய்விட்டது. லீச் பந்தில் புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே வந்தவுடன் ரன்கள் வர ஆரம்பித்தன. 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்த ரஹானே, உணவு இடைவேளைக்கு முன்பு ஆண்டர்சன் பந்துவீச்சில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 106 பந்துகளில் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து அணியினர் சிறப்பாகப் பந்துவீசினார்கள். ரோஹித் சர்மாவும் ரிஷப் பந்தும் கூட்டணி அமைத்து மேலும் சரிவு ஏற்படாமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டார்கள். எனினும் அரை சதத்தை நெருங்கும்போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. இதன்பிறகு அஸ்வின் 13 ரன்களில் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2-வது நாளின் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 62 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 36 ரன்களுடனும் வாஷிங்டன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 52 ரன்கள் பின்தங்கியிருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இரு இளம் வீரர்களும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்கள். 82 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார் ரிஷப் பந்த். இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ரிஷப் பந்தும் வாஷிங்டனும் 100 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இதன்பிறகு இருவரும் அடுத்த 46 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற இருவரும் முக்கியக் காரணமாக அமைந்தார்கள். 

115 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் ரிஷப் பந்த். இது அவருடைய 3-வது டெஸ்ட் சதமாகும். ரூட் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தைக் கொண்டாடினார். சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்டுகளில் சிறப்பாக கீப்பிங் செய்ததுடன் ரன்களும் எடுத்து இந்திய அணியின் முக்கிய வீரராக வளர்ச்சி பெற்றுள்ளார் ரிஷப் பந்த். இதன்பிறகு 101 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 85 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 44 ரன்களும் அக்‌ஷர் படேல் 1 ரன்னும் எடுத்து விளையாடி வருகிறார்கள். 

Tags : Pant England
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT