செய்திகள்

4-ம் டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்தை 205 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி!

4th Mar 2021 05:08 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

6-வது ஓவரை அக்‌ஷர் படேல் வீச வந்தார். 2-வது பந்திலேயே டாம் சிப்லியை போல்ட் செய்தார். சிப்லி 2 ரன்கள் மட்டும் எடுத்தார். அக்‌ஷர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 9 ரன்களில் ஆட்டமிழந்தார் கிராவ்லி. இதன்பிறகு கேப்டன் ரூட்டை 5 ரன்களில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் சிராஜ். ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிராஜ் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். 

பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்தக் கூட்டணி 44 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.

முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 28, ஸ்டோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு பேர்ஸ்டோவை 28 ரன்களில் வீழ்த்தினார் சிராஜ். நன்கு விளையாடி அரை சதமெடுத்த பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் 5 விக்கெட்டுகளைக் குறைந்த ரன்களில் வீழ்த்தியதால் இந்திய பந்துவீச்சாளர்கள் உற்சாகம் ஆனார்கள்.

அக்‌ஷர் படேல், விராட் கோலி

இதையடுத்து முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 56 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. போப் 21, டான் லாரன்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு போப்பின் விக்கெட்டை மீண்டும் வீழ்த்தினார் அஸ்வின். போப் 29 ரன்கள் எடுத்தார். நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பென் ஃபோக்ஸ் 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் எடுத்தார் அக்‌ஷர் படேல். லாரன்ஸ் 46 ரன்களிலும் டாம் பெஸ் 3 ரன்களிலும் அக்‌ஷர் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். 

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு இப்போதுதான் இங்கிலாந்து அணி 200 ரன்களைக் கடந்தது. ஜாக் லீச், 7 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரோஹித் சர்மாவும் புஜாராவும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆண்டர்சன் தொடர்ச்சியாக 5 மெயிடன் ஓவர்கள் வீசி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 15, ரோஹித் சர்மா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

Tags : England Ahmedabad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT