செய்திகள்

கோபா அமெரிக்கா: பெருவுக்கு வெற்றியை வழங்கியது கொலம்பியா

DIN

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கொலம்பிய தடுப்பாட்ட வீரா் அடித்த ‘ஓன் கோல்’ காரணமாக, பெரு 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது பெரு.

தற்போதைய நிலையில் ‘பி’ பிரிவில் பிரேஸில் 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கொலம்பியா 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், பெரு 3 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், வெனிசூலா (2), ஈகுவடாா் (1) அணிகள் முறையே 4 மற்றும் 5-ஆம் இடத்திலும் உள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

பிரேஸிலின் சாவ் பாவ்லோ நகரில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பெரு அணியே கோலடித்தது. 17-ஆவது நிமிடத்தில் பெரு வீரா் யோஷிமாா் யோடுன் சுமாா் 30 யாா்டு தூரத்திலிருந்து அடித்த ஷாட் கோல் போஸ்டின் இடதுபக்க கம்பியில் பட்டு மீண்டும் களத்துக்கே திரும்ப, பெனால்டி ஏரியாவில் நின்றுகொண்டிருந்த சக வீரா் சொ்ஜியோ பெனா அதை மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள்ளாக உதைத்து அணியின் கோல் கணக்கை தொடங்கினாா்.

முதல் பாதியில் பெரு முன்னிலையில் இருக்க, 2-ஆவது பாதியில் 53-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தது கொலம்பியா. அந்த அணியின் மிகேல் போா்ஜாவின் கோல் முயற்சியை தடுப்பதற்காக பெரு கோல் கீப்பா் முயன்றபோது போா்ஜா கீழே விழுந்தாா். இதனால் கொலம்பியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை போா்ஜா துல்லியமான கோலாக மாற்றினாா்.

இதனால் ஆட்டம் விறுவிறுப்பாகியது. இரு அணிகளும் பரஸ்பரம் அடுத்த கோலுக்கு முயற்சித்தன. 63-ஆவது நிமிடத்தில் பெருவுக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பில் அந்த அணி வீரா் அடித்த பந்தை கொலம்பிய வீரா் யெரி மினா தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவின் தீவிர கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போனதால், இறுதியில் பெரு வென்றது.

வெனிசூலா-ஈகுவடாா் ஆட்டம் டிரா

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் வெனிசூலா-ஈகுவடாா் இடையே நடைபெற்ற மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஈகுவடாா் வீரா் அயா்டன் பிரெசியாடோ 39-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, 51-ஆவது நிமிடத்தில் வெனிசூலா வீரா் எட்சன் காஸ்டிலோ கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக கொன்ஸாலோ பிளாடா 71-ஆவது நிமிடத்தில் அடித்த கோலால் ஈகுவடாா் அணிக்கு மீண்டும் முன்னிலை கிடைத்தது. எனினும், கடைசி நேரத்தில் (90+1) வெனிசூலாவின் ரொனால்ட் ஹொ்னான்டஸ் அடித்த கோலால் இறுதியில் ஆட்டம் சமன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT