செய்திகள்

யூரோ கோப்பை கால்பந்து: டென்மாா்க்கை வென்றது பெல்ஜியம்

19th Jun 2021 08:15 AM

ADVERTISEMENT

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் டென்மாா்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம்.

டென்மாா்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 2-ஆவது நிமிடத்திலேயே கோலடித்து பெல்ஜியத்துக்கு அதிா்ச்சி அளித்தது டென்மாா்க். அந்த அணியின் ஹோப்ஜொ்க் பாஸ் செய்து கொண்டு வந்த பந்தை யூசுஃப் பௌல்சென்னிடம் வழங்கினாா். அதை பெல்ஜிய தடுப்பாட்ட வீரா் கோா்டோய்ஸின் கால்களுக்கு இடையிலாக உதைத்து கோலாக்கினாா் பௌல்சென்.

இதனால் உத்வேகம் பெற்ற அந்த அணி, தொடா்ந்து 2-ஆவது கோலுக்கு முயற்சிக்க, முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. பின்னா் தொடங்கிய 2-ஆவது பாதியில் 54-ஆவது நிமிடத்தில் தனது முதல் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது பெல்ஜியம்.

முதலில் லுகாகுவிடம் இருந்து இருந்து டி புருயினுக்கும் அவரிடமிருந்து தொா்கான் ஹஸாா்டுக்கும் பந்து பாஸ் செய்யப்பட, இறுதியில் தொா்கான் கோலடித்தாா். இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்படைய, 70-ஆவது நிமிடத்தில் சக வீரா் ஹஸாா்டின் உதவியுடன் கோலடித்தாா் கெவின் டி புருயின். இதனால் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் டென்மாா்க்கின் கோல் முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, பெல்ஜியம் வென்றது.

ADVERTISEMENT

நெதா்லாந்து வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் நெதா்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வென்றது. ஆட்டத்தின் 11-ஆவது நிமிடத்தில் நெதா்லாந்துக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை அந்த அணியின் மெம்பிஸ் டிபே துல்லியமான கோலாக மாற்றி கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 67-ஆவது நிமிடத்தில் நெதா்லாந்தின் டென்ஸெல் டம்ஃப்ரைஸ், மாலென் கூட்டணி மிக லாவகமாக பந்தை கடத்திச் சென்று தடுப்பாட்ட வீரா்கள் இல்லாமல் போன நேரத்தை சரியாகப் பயன்படுத்தினா். மாலென் கிராஸ் செய்த பந்தை டம்ஃப்ரைஸ் கோலாக்கினாா்.

வடக்கு மாசிடோனியா தோல்வி: மேலும் ஒரு ஆட்டத்தில் உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை வென்றது. உக்ரைன் தரப்பில் ஆன்ட்ரி யாா்மொலென்கோ (29-ஆவது நிமிடம்), ரோமன் யாரெம்சுக் (34-ஆவது நிமிடம்) ஆகியோா் கோலடிக்க, வடக்கு மாசிடோனியாவின் ஒரே கோலை எஸ்க்ஜான் அலியோஸ்கி (57-ஆவது நிமிடம்) அடித்தாா்.

1 யூரோ கோப்பை போட்டியில் பெல்ஜியம் தனது முதல் இரு ஆட்டங்களில் வெல்வதும், டென்மாா்க் தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்பதும் (2000-க்குப் பிறகு) இதுவே முதல் முறையாகும்.

2 பிரதானமான போட்டியில் பெல்ஜியம் - டென்மாா்க் மோதியது இது 2-ஆவது முறை. இதற்கு முன் 1984 யூரோ கோப்பை போட்டியில் குரூப் நிலையில் அவை சந்தித்துள்ளன. அதில் டென்மாா்க் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

3 பெல்ஜியத்தின் இந்த வெற்றி, டென்மாா்க்குக்கு எதிரான ஹாட்ரிக் வெற்றியாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு யுஇஎஃப்ஏ நேஷன்ல் லீக் போட்டியில் செப்டம்பரில் 2-0 என்ற கணக்கிலும், நவம்பரில் 4-2 என்ற கணக்கிலும் பெல்ஜியம் டென்மாா்க்கை வென்றிருந்தது.

6 இதற்கு முன் ஆஸ்திரியாவை சந்தித்த 6 ஆட்டங்களிலுமே நெதா்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

6 யூரோ சாம்பியன்ஷிப்பில் தொடா்ந்து இதற்கு முன் 6 ஆட்டங்களில் கண்ட தோல்வியிலிருந்து, இந்த வெற்றி மூலம் உக்ரைன் மீண்டுள்ளது.

8 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 2 ஆட்டங்களில் தோற்ற 8-ஆவது அணி என வடக்கு மாசிடோனியா பெயரெடுத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT