செய்திகள்

குயின்ஸ் கிளப் டென்னிஸ்: ஆன்டி முர்ரே வெற்றி

17th Jun 2021 04:44 AM

ADVERTISEMENT

 

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீரர் ஆன்டி முர்ரே முதல் சுற்றில் வெற்றி பெற்றார். 
உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான முர்ரே, கடந்த ஓராண்டில் டென்னிஸ் போட்டிகளில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 
லண்டனில் நடைபெறும் இப்போட்டியில் தனது முதல் சுற்றில் அவர் பிரான்ஸின் பெனாய்ட் பேரை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அவர், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை சந்திக்கிறார். 
காயத்துக்கான தொடர் அறுவைச் சிகிச்சைகள் காரணமாக கடந்த ஓராண்டாகவே அவரால் சிறப்பாக களம் காண முடியாத நிலை இருந்தது. இச்சூழலில் இந்த வெற்றியின் காரணமாக அவர் களத்தில் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை ஆதரித்தனர். வெற்றிக்குப் பிறகு பேசிய முர்ரே, "நான் டென்னிஸ் விளையாடுவதை விரும்புகிறேன். கடந்த சில காலமாக நான் நினைத்தது போல் என்னால் விளையாட முடியவில்லை. அதைக் கடந்து தற்போது களத்தில் நிற்பதற்காகவும், இந்த வெற்றிக்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார். 
இதர ஆட்டங்களில் மேட்டியோ பெரெட்டினி சக இத்தாலி வீரரான ஸ்டெஃபானோ டிரவாக்லியாவை 7-6 (7/5), 7-6 (7/4) என்ற செட்களில் வென்றார். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 7-6 (8/6), 7-6 (8/6) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டர் வுகிச்சை வீழ்த்தினார். 
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் செர்பியாவின் லாஸ்லோ டெரெவை தோற்கடித்தார். இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் தைவானின் லு யென் சுன்னையும், குரோஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-7 (5/7), 7-6 (7/4) என்ற செட்களில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரையும் வென்றார். 
கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஜெரிமி சார்டியையும், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 4-6, 6-3, 6-4 என்ற செட்களில் ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனையும் வீழ்த்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT