செய்திகள்

யூரோ கோப்பை கால்பந்து: ஹங்கேரியை வீழ்த்தியது போர்ச்சுகல்: ரொனால்டோ சாதனை

DIN

புடாபெஸ்ட்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான போர்ச்சுகல் ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணிக்காக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களும், ரஃபேல் குவெரெய்ரோ ஒரு கோலும் அடித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 43-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை நூலிழையில் வீணடித்தார் ரொனால்டோ. சக வீரர் ஜோடா அடித்த பந்து எதிர்பாராத தருணத்தில் ரொனால்டோவிடம் வர, அவரது முயற்சி இலக்கு தவறி, பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலாக பறந்து சென்றது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவடைந்தது.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, பரஸ்பரம் எதிரணியின் அரண் போன்ற தடுப்பாட்டங்களால் கோல் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. 80-ஆவது நிமிடத்தில் ஹங்கேரியின் லோவ்ரென்சிக்ஸ் கோலடிக்க, அது "ஆஃப்சைடு' ஆனது.
இந்நிலையில், போர்ச்சுகல் தடுப்பாட்ட வீரர் ரஃபேல் குவெரெய்ரோ 84-ஆவது நிமிடத்தில் கோல் போஸ்ட் நோக்கி அடித்த பந்து, ஹங்கேரி தடுப்பாட்ட வீரர் ஆர்பன் மீது பட்டு களத்துக்கு திரும்ப, மீண்டும் அந்தப் பந்தை தகுந்த இடைவெளி பார்த்து கோல் போஸ்ட்டுக்குள்ளாகத் தள்ளினார் ரஃபேல். இதனால் போர்ச்சுகல் முன்னிலை பெற்றது.
அடுத்த 3 நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரொனால்டா தவறாமல் கோலடிக்க, அணியின் கோல் 2-ஆக உயர்ந்தது. கடைசியாக "இஞ்சுரி டைம்'-இல் ரொனால்டோ மீண்டும் ஒரு ஃபீல்டு கோல் அடிக்க, இறுதியில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.


பிரான்ஸ் வெற்றி


மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் 20-ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ் ஹம்மெல்ஸ் தவறுதலாக "ஓன் கோல்' அடித்தது பிரான்ஸூக்கு சாதகமானது.


ஆட்டம் சமன்

ஸ்பெயின் - ஸ்வீடன் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

முதல் வீரர்

ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் (11) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் 5 சீசன்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ள ரொனால்டோ, அவை அனைத்திலுமே கோல் அடித்த பெருமையும் பெற்றுள்ளார்.

67,215 ரசிகர்கள்


யூரோ கோப்பை கால்பந்து போட்டி 10 நாடுகளில் நடைபெறும் நிலையில், கரோனா சூழல் காரணமாக 9 நாடுகள் ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளன. ஆனால் ஹங்கேரி மட்டும் மைதானத்தின் முழு கொள்ளளவுக்கும் ரசிகர்களை அனுமதித்துள்ளது. எனவே, புடாபெஸ்டில் நடைபெற்ற போர்ச்சுகல் - ஹங்கேரி ஆட்டத்தை 67,215 ரசிகர்கள் மைதானத்தில் கூடி கண்டுகளித்தனர்.


14

முக்கியமான போட்டிகளில் ஹங்கேரியை இத்துடன் 14 முறை சந்தித்துள்ள போர்ச்சுகல், அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது.


6


கடந்த 6 சீசன்களில் நடைபெற்ற யூரோ கோப்பை போட்டிகளிலுமே நாக் அவுட் சுற்று வரை முன்னேறிய ஒரே அணியாக போர்ச்சுகல் உள்ளது.


5

ஜெர்மனிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த 5 முறை மோதிய அனைத்து ஆட்டங்களிலுமே பிரான்ஸ் வென்றுள்ளது.


1


ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனி தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்டது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் ஆடிய 12 தொடக்க ஆட்டங்களில் 7 வெற்றிகளை பெற்ற ஜெர்மனி, 5 ஆட்டங்களை டிரா செய்துள்ளது.


பாராசூட்டில் வந்து ஆர்ப்பாட்டம்...


ஜெர்மனியின் முனீச் நகர மைதானத்தில் பிரான்ஸ் - ஜெர்மனி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, "கிரீன்பீஸ்' அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விதமாக மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்டில் மைதானத்திற்கு மேலே பறந்தார். ஒரு கட்டத்தில் மைதானத்தின் மேற்கூரையுடன் இணைக்கப்பட்டிருந்த கேமரா கேபிள்களில் அவரது பாராசூட் சிக்கியதில் மைதான மேற்கூரை இடிபாடுகள் சில ரசிகர்களிடையே விழுந்தது. இதில் இருவர் காயமடைந்தனர்.
பின்னர் மைதானத்தில் தரையிறங்கிய அந்த நபரை காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ள கிரீன்பீஸ் அமைப்பு, மைதானத்தின் மீதாகப் பறந்து ஆர்ப்பாட்டத்தை வெளிப்படுத்துவதே தங்களது நோக்கமாக இருந்ததென தெரிவித்தது. கரியமில வாயு வெளியீட்டுக்கு எதிராக கிரீன்பீஸ் அமைப்பு போராடி வருகிறது.

ரூ.29,000 கோடியை இழந்தது கோக கோலா நிறுவனம்


ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பின்போது, தனக்கு முன்பாக மேஜையில் இருந்த இரண்டு கோக கோலா பாட்டில்களை ரொனால்டோ அகற்றினார்.
அத்துடன் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டினார்.
குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீரை பருக பரிந்துரைக்குமாறு அவரது செயல் இருந்தது.
ரொனால்டோவின் இந்த செயலால் பங்குச் சந்தையில் கோக கோலா நிறுவன பங்கின் விலை சரிந்ததாகவும், இதனால் அந்த நிறுவனத்துக்கு ரூ.29,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் விளம்பரதாரர்களில் கோக கோலாவும் ஒன்றுஎன்பது குறிப்பிடத்தக்கது. கார்பனால் செறிவூட்டிய பானங்களிடம் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக ரொனால்டோ முன்பு தெரிவித்தது
நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT