செய்திகள்

வெற்றி பெற வேண்டுமென்றால் அதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது: நடால்

12th Jun 2021 04:55 PM

ADVERTISEMENT

 

விளையாட்டில் சில நாள்களில் நீங்கள் ஜெயிப்பீர்கள், சில நாள்களில் தோற்பீர்கள் என பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து நடால் கூறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் நடாலை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச்.

பாரிஸ் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவார் என்றே பெரும்பாலான ரசிகர்களால் எண்ணினார்கள்.

ADVERTISEMENT

ஆனால் உலகின் நெ.1 வீரரான ஜோகோவிச், 3-6, 6-3, 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆட்டம் நான்கு மணி நேரம் 22 நிமிடம் நடைபெற்றது. 

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கடைசியாக நடாலை வீழ்த்தியவரும் ஜோகோவிச் தான். 2015 காலிறுதியில் நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச். 2016-ல் காயம் காரணமாக 3-வது சுற்றுடன் நடால் வெளியேறினார். அதன்பிறகு 2017 முதல் 2020 வரை தொடர்ச்சியாக நான்கு முறை பிரெஞ்சு ஓபன் போட்டியை வென்றார். அதற்கு முன்பு 2005 முதல் 2008 வரை தொடர்ச்சியாக நான்கு முறையும் 2010 முதல் 2014 வரை தொடர்ச்சியாக ஐந்து முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை நடால் வென்றார். இதுவரை பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடிய 108 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளார். 

2005-ல் தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் நடால். அதன்பிறகு 2009, 2015, 2016, 2021 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே நடாலால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது மகத்தான வெற்றியைப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச். 

தோல்வி பற்றி நடால் பேட்டியளித்ததாவது:

இதுதான் விளையாட்டு. சில நாள்களில் நீங்கள் ஜெயிப்பீர்கள், சில நாள்களில் தோற்பீர்கள். என்னுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த முயன்றேன்.

3-வது செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது செட் பாயிண்ட் கிடைத்தது. அப்போது எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். தவறுகளால் அந்த செட்டை இழந்தேன். சூழலை நன்றாகப் பயன்படுத்தி ஜோகோவிச் ஜெயித்தார். நான் எட்டு டபுள் ஃபால்டுகளைச் செய்தேன். நீங்கள் வெற்றி பெற விரும்பினால் அதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது. எனக்கு சிறந்த நாளாக அமையவில்லை என்றார். 

Tags : Nadal mistakes பிரெஞ்சு ஓபன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT