செய்திகள்

அஸ்வின் எக்காலத்துக்கும் தலைசிறந்த வீரரா? வம்புக்கு இழுக்கும் மஞ்சரேக்கர்

6th Jun 2021 03:42 PM

ADVERTISEMENT


இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை எக்காலத்துக்கும் தலைசிறந்த வீரர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மஞ்சரேக்கரின் கருத்து சமூக ஊடகங்களில் டிரெண்டாகத் தொடங்கியது.

இதுபற்றி கிரிக்இன்ஃபோ தளத்திடம் மஞ்சரேக்கர் கூறியது:

"அஸ்வினை எக்காலத்துக்கும் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராகப் பேசத் தொடங்கினால் அதில் எனக்கு சில பிரச்னைகள் உள்ளன. எனக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்னை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.

ADVERTISEMENT

கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் அஸ்வினுக்கு இணையாக விக்கெட் வீழ்த்தும் திறனை ஜடேஜா பெற்றிருக்கிறார். 

பிறகு இங்கிலாந்துக்கு எதிரான கடைசி தொடரில் அஸ்வினைக் காட்டிலும் அக்சர் படேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதான் அவரை எக்காலத்துக்கும் தலைசிறந்த வீரர் என்று அழைப்பதில் எனக்கு இருக்கும் பிரச்னை" என்றார் அவர்.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 409 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இந்திய மண்ணில் 286 விக்கெட்டுகளும், வெளிநாடுகளில் 123 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

மொத்தம் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இந்திய மண்ணில் 24 முறையும், வெளிநாடுகளில் 6 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்களிலும் விளையாடிய அஸ்வின் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே தொடரில் அறிமுக வீரராகக் களமிறங்கி 3 ஆட்டங்களில் விளையாடிய அக்சர் படேல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

Tags : ashwin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT