செய்திகள்

யூரோ கோப்பை: லண்டனில் வன்முறையில் ஈடுபட்ட 49 ரசிகர்கள் கைது

12th Jul 2021 04:15 PM

ADVERTISEMENT

 

யூரோ கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து தோல்வியடைந்ததையடுத்து வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது.

யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி.

ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ போட்டி, கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டுக்கு மாற்றப்பட்டது. தலைசிறந்த 24 நாடுகளின் அணிகள், பங்கேற்ற இப்போட்டி கடந்த ஜூன் 11-ம் தேதி 11 நகரங்களில் தொடங்கியது.

ADVERTISEMENT

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கடந்த 1966-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதே, அது இறுதியாக வென்ற பெரிய போட்டியாகும். அதன் பின் யூரோ 68, 96, 1990, 2018 உலகக் கோப்பை, 2019 யூஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் உள்ளிட்ட 5 பெரிய போட்டிகளில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்நிலையில் நடப்பு யூரோ போட்டியில் பலம் வாய்ந்த ஜொ்மனி, உக்ரைன் அணிகளைத் தொடக்க சுற்றுகளில் வெளியேற்றியது. இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி 55 ஆண்டுகாலமாகக் கோப்பையை வெல்லும் கனவை நனவாக்கும் முனைப்பில் இருந்தது. 

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் இங்கிலாந்தும் 67-வது நிமிடத்தில் இத்தாலியும் கோலடித்தன. கூடுதல் நேரத்துக்குப் பிறகும் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. இறுதியில் பெனால்டி முறையில் 3-2 என இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி. 

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு இங்கிலாந்தின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார்கள். இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. லண்டனில் உள்ள பல முக்கியச் சாலைகளில் திரண்ட ரசிகர்கள், தெரு விளக்குகள், பேருந்துகள் மீது ஏறி பாட்டில்களை சாலைகளில் வீசினார்கள். ஓரிடத்தில் தீ வைப்பு சம்பவமும் நடைபெற்றுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு டிக்கெட் இல்லாத பல ரசிகர்கள் மைதானத்துக்குள் செல்ல முயன்று ரகளையில் ஈடுபட்டார்கள். 

இதையடுத்து யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட ரசிகர்களில் 49 பேரை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது. இதுபற்றி மெட்ரோபாலிடன் போலீஸ், ட்விட்டரில் தெரிவித்ததாவது:

யூரோ 2020 போட்டிக்கான காவல்துறைப் பாதுகாப்பு முடிவுக்கு வருகிறது. பொறுப்புடன் நடந்துகொண்ட பல ஆயிரம் ரசிகர்களுக்கு நன்றி. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 49 பேரைக் கைது செய்துள்ளோம். இரவு முழுக்கப் பாதுகாப்புக்கு எங்களுடைய அதிகாரிகள் பணியாற்றுவார்கள். வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களைத் தடுக்கச் சென்ற எங்களுடைய 19 காவல்துறை அதிகாரிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. லண்டனைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள உதவிய அதிகாரிகளுக்கு நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT