செய்திகள்

கோபா அமெரிக்கா: இறுதி ஆட்டத்தில் பிரேஸில்

7th Jul 2021 02:59 AM

ADVERTISEMENT

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
புதன்கிழமை காலை ஆர்ஜென்டீனா - கொலம்பியா அணிகள் இடையே நடைபெறும் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் சாம்பியன் கோப்பைக்காக பிரேஸில் மோதும்.
பிரேஸில் அணியில் "காத்திருப்பு வீரர்'-ஆக கோபா அமெரிக்கா போட்டியை தொடங்கி, தற்போது அந்த அணியின் பிரதான முன்கள வீரராக மாறியிருக்கும் லுகாஸ் பகேடாவே அணிக்கான ஒரே கோலை அடித்தார்.
முன்னதாக பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷம் காட்டியது பிரேஸில். முதல் பாதி முழுவதுமாக ஆட்டத்தை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது அந்த அணி.
8-ஆவது நிமிடத்தில் சக வீரர் லூகாஸ் பகேடா வழங்கிய பாஸை அற்புதமாக கடத்திச் சென்ற ரிச்சார்லிசன், தன்னை நோக்கி வந்த பெரு கோல்கீப்பர் பெட்ரோ காலிஸை ஏமாற்றி பந்தை கோல் போஸ்டின் வலது பக்கமாக கொண்டு சென்று பிறகு நெய்மருக்கு கிராஸ் வழங்கினார். நெய்மர் அதை கோலடிக்க முயல, பந்து கோல் போஸ்ட் மேலாகச் சென்றது.
11-ஆவது நிமிடத்தில் நெய்மர் காலில் பெரு வீரர் செர்ஜியோ பெனா மிதித்ததால் அவர் கீழே விழ, பிரேஸில் அணிக்கு "ஃப்ரீ கிக்' வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதை கோலாகவிடாமல் திறம்பட தடுத்தார் பெரு கோல்கீப்பர் பெட்ரோ.
18-ஆவது நிமிடத்தில் பேக் ஹீல் மூலம் கேஸ்மிரோ பாஸ் செய்த பந்தைப் பெற்ற லுகாஸ் பகேடா, அதை கோல் போஸ்டின் வலது பக்கமாக கடத்திச் சென்று பின்னர் நெய்மருக்கு கிராஸ் வழங்கினார். அவரது கோல் முயற்சிக்கும் பெரு கோல்கீப்பர் பெட்ரோ அணை போட்டார். தன் மீது பட்டு களத்துக்கு திரும்பிய பந்தை மற்றொரு பிரேஸில் வீரர் ரிச்சார்லிசன் கோலடிக்க முயல, விடாமல் போராடி அதையும் தடுத்தார் பெட்ரோ. அவரது சிறப்பான முயற்சியாலேயே பிரேஸிலின் வெற்றிக்கான கோல் தள்ளிப்போனது.
இறுதியாக 34-ஆவது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை எட்டியது பிரேஸில். ஏறத்தாழ ஹாஃப் லைனுக்கு அருகிலிருந்து பந்தை கடத்திக் கொண்டு கோல் போஸ்டின் இடது பக்கமாக வந்த நெய்மர், பெரு தடுப்பாட்ட வீரர்கள் மூவரை திறம்பட சமாளித்து பந்தை கிராஸ் வழங்கினார். அதை அப்படியே திருப்பி கோல் போஸ்டுக்குள் உதைத்து கோலடித்தார் லூகாஸ் பகேடா.
2-ஆவது பாதியில் பெரு அணி சற்று ஆக்ரோஷம் காட்டியது. 49-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் முன்கள வீரர் கியான்லுகா லாபாடுலாவின் அருமையான கோல் முயற்சியை பிரேஸில் கோல்கீப்பர் எடர்சன் மோரேஸ் தகர்த்தார். பின்னர் 80-ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பும் வீணானது. தங்களது கோல் வாய்ப்புக்காக அந்த அணி கடுமையாக முயற்சித்தும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது. இறுதியில் பிரேஸில் வென்றது.

"இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீன அணியுடன் மோத விரும்புகிறேன். அந்த அணியில் எனக்கு அதிகநண்பர்கள் உள்ளனர். எனவே அவர்களது அரையிறுதி ஆட்டத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். ஆனால் இறுதி ஆட்டத்தில் அவர்களுடன் மோதும்போது பிரேஸில் தான் வெல்லும்'
- நெய்மர்
(பிரேஸில் வீரர்)

10  நடப்புச் சாம்பியனான பிரேஸில் தனது 10-ஆவது கோபா அமெரிக்காக சாம்பியன் பட்டத்துக்கான உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

3-1 கடந்த சீசன் (2019) இறுதி ஆட்டத்தில் பிரேஸில் 3-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தது.

3-ஆவது இடத்துக்கு மோதும் பெரு இந்த அரையிறுதி ஆட்டத்தில் தோற்ற பெரு அணி, 2-ஆவது அரையிறுதியில் தோல்வியை சந்திக்கும் அணியுடன் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT