செய்திகள்

12 வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர்: உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி வீரர் அபிமன்யு மிஸ்ரா

1st Jul 2021 01:16 PM

ADVERTISEMENT

 

12 வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி புதிய உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளி வீரர் அபிமன்யு மிஸ்ரா

2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடங்கள், 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். அவர் சாதனையைத் தாண்ட பலர் முயற்சி செய்தும் முடியாமல் போனது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தகர்க்க முயற்சி செய்தார். ஆனால் 12 வருடங்கள் 10 மாதங்கள், 13 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். இதையடுத்து 12 வருடங்கள், ஏழு மாதங்கள், 17 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி, பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளினார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இது, கர்ஜாகின்-னை விடவும் 17 நாள்கள் மட்டுமே அதிகம்.

இந்நிலையில் கர்ஜாகினின் சாதனையைத் தகர்த்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிமன்யு மிஸ்ரா. அமெரிக்காவில் வசிக்கும் அபிமன்யு, 12 வருடங்கள் 4 மாதங்கள் 25 நாள்களில் கிராண்ட்மாஸ்டர் ஆகி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதனால் கர்ஜாகினின் 19 வருட சாதனை முடிவுக்கு வந்தது. ஹங்கேரியின் புதாபெஸ்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் லியோன் லூக்கைத் தோற்கடித்து கிராண்ட்ஸ்மாஸ்டர் ஆவதற்கான தகுதியை அடைந்தார் அபிமன்யு. 

ADVERTISEMENT

2019-ல் 10 வயதில் (10 வருடங்கள், 9 மாதங்கள், 20 நாள்கள்) சர்வதேச மாஸ்டர் ஆகி உலக சாதனை படைத்த அபிமன்யு, ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார். செப்டம்பர் 5-க்குள் கிராண்ட்மாஸ்டரானால் உலக சாதனை படைக்க வாய்ப்பிருந்த நிலையில் இரு மாதத்துக்கு முன்பு இச்சாதனையை நிகழ்த்திவிட்டார் அபிமன்யு. 

10 வருடங்களுக்கு முன்பே மத்தியப் பிரதேசத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்கள் அபிமன்யுவின் குடும்பத்தினர். கரோனா பரவல் மற்றும் போட்டிகள் ரத்தானதால் திட்டமிட்டபடி கடந்த வருடம் அபிமன்யுவால் செஸ் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது. எனினும் இந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே போட்டிகளில் கலந்துகொண்டு நினைத்ததைச் சாதித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT