செய்திகள்

இங்கிலாந்துடனான 2-வது சென்னை டெஸ்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி?

31st Jan 2021 08:06 PM

ADVERTISEMENT


இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் பிப்ரவரி 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் ஆட்டம் பிப்ரவரி 13-ம் தேதியும் தொடங்குகிறது.

முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது. இதனால், சென்னை டெஸ்ட் ஆட்டங்களில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்த பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"புதிய வழிகாட்டுதலின்படி 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்கலாம். எனவே, எங்களது செயலாளர் மூலம் இதுகுறித்து பிசிசிஐ-யிடம் பேசவுள்ளோம். அதன்பிறகே ஒரு முடிவு எட்டப்படும். எனவே, நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பிசிசிஐ-யிடமிருந்து ஒப்புதல் கிடைத்தால் தமிழக அரசின் உத்தரவுப்படி 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால், அனைத்தும் பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவைச் சார்ந்துதான் உள்ளது. எனவே, இதுகுறித்து நாளை ஒரு பார்வை கிடைக்கும்."

Tags : England Test
ADVERTISEMENT
ADVERTISEMENT