செய்திகள்

சையத் முஷ்டாக் அலி டி20: 2007-ல் முதல் கோப்பையை வென்று கொடுத்த தினேஷ் கார்த்திக்

30th Jan 2021 04:29 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு 2007-ல் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி தொடங்கப்பட்டது. 

இந்த வருடத்துக்கான டி20 போட்டியின் இறுதிச்சுற்று நாளை ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியும் பரோடா அணியும் மோதுகின்றன.

நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் தமிழக அணி ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. கேப்டன் அசோக் மெனாரியா 32 பந்துகளில் 51 ரன்களும் அர்ஜித் குப்தா 45 ரன்களும் எடுத்தார்கள். தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தமிழக அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றுக்கு மீண்டும் நுழைந்துள்ளது. 34 வயது அருண் கார்த்திக் 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 89 ரன்களும் 35 வயது தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.  

ADVERTISEMENT

கடந்த வருடமும் இறுதிச்சுற்றுக்கு நுழைந்த தமிழக  அணி, 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகத்திடம் தோல்வியடைந்தது. இதனால் இம்முறை கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் எனத் தீவிரமாக உள்ளார்கள் தமிழக வீரர்கள்.

சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. 2007-ல் ஐபிஎல் போட்டிக்கு முன்பு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி தொடங்கப்பட்டபோது முதல் சாம்பியனே தமிழக அணி தான். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இப்போது தமிழக அணியின் கேப்டனாக உள்ள தினேஷ் கார்த்திக் தான் அப்போதும் தமிழக அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்றுள்ளார். 13 வருடங்கள் கழித்தும் 35 வயது தினேஷ் கார்த்திக்கால் தொடர்ந்து தமிழக அணிக்குப் பங்களிக்க முடிகிறது, தலைமையேற்க முடிகிறது என்பது அவருடைய திறமைக்கான சான்று. 

உள்ளூர் போட்டிகளில் தமிழக அணி சிறப்பாக விளையாடும்போது அதனால் தமிழக அணி வீரர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால் இன்னொரு முறை கோப்பையை வென்று சாதிக்க வேண்டிய பொறுப்பு தினேஷ் கார்த்திக்கிடம் உள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT