செய்திகள்

சிட்னி டெஸ்டில் இனரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய வீரர்கள்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கை

27th Jan 2021 12:55 PM

ADVERTISEMENT

 

சிட்னி டெஸ்டில் இந்திய வீரர்கள் இனரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது சிட்னி நகரில் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றது. அதில் 3-ஆவது நாளில் ரசிகா்கள் சிலா் இந்தியப் பந்துவீச்சாளர் பும்ராவை இனவெறியுடன் திட்டியதாகப் புகாா் எழுந்தது. 4-ஆம் நாள் ஆட்டத்தின்போதும் அதேபோல் சில ரசிகா்கள் மற்றொரு இந்தியப் பந்துவீச்சாளரான முகமது சிராஜை இனவெறியுடன் திட்டினா்.
 இதுதொடா்பாக நடுவரிடம் அவர் முறையிட ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ரசிகா்கள் பகுதியில் இருந்த 6 போ் வெளியேற்றப்பட்டனா். பின்னா் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

இந்த விவகாரம் தொடா்பாக பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகாா் அளித்தது. அத்துடன் சம்பவம் தொடா்பாக 14 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐசிசியும் ஆஸ்திரேலிய வாரியத்துக்கு அறிவுறுத்தியது.

ADVERTISEMENT


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசியிடம் ஆஸ்திரேலிய வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கான தலைவா் சீன் கேரல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

சிட்னி டெஸ்டில் ரசிகர்களின் நடத்தை குறித்த அறிக்கையை ஐசிசியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் இனரீதியாக இழிவுபடுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இதுகுறித்த விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

காணொலிக் காட்சிகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களின் வாக்குமூலம் போன்றவற்றைக் கொண்டு இந்திய ரசிகர்களை இழிவுபடுத்திய ரசிகர்களைத் தேடி வருகிறோம். இக்குற்றத்தில் ஈடுபட்ட ரசிகர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும். நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். எனினும் ஊடகத்தால் படமாக்கப்பட்ட ரசிகர்கள் இந்திய வீரர்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபடவில்லை என்றும் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT