செய்திகள்

சையத் முஷ்டாக் அலி டி20: நடப்பு சாம்பியன் கர்நாடகம் தோல்வி!

26th Jan 2021 03:07 PM

ADVERTISEMENT

 

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் கர்நாடகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் அணி.

கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை லீக் சுற்றுகள் நடைபெற்றன. லீக் ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றன. 38 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அனைத்து அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடின. குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாடியது. 

நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் இன்று முதல் நடைபெறுகின்றன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளிலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 29 அன்றும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன.  

ADVERTISEMENT

ஆமதாபாத் மோடேரா மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கா்நாடகத்தை, பஞ்சாப் அணி எதிா்கொண்டது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும். எனினும் இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கர்நாடக அணி திணறியது. அதிகபட்சமாக அனிருத்தா ஜோஷி 27 ரன்கள் எடுத்தார். கர்நாடக அணி 17.2 ஓவர்களில் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சித்தார்த் கெளல்.

அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி, 12.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது. 20 வயது விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் 49, கேப்டன் மன்தீப் சிங் 35 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

லீக் சுற்றில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்ற தமிழக அணி, இன்று நடைபெறவுள்ள 2-வது காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசத்தை எதிர்கொள்கிறது. 

Tags : Syed Mushtaq Ali Trophy punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT