செய்திகள்

இதை மட்டும் செய்துவிட்டால் பாதி மீசையுடன் மைதானத்தில் விளையாடுகிறேன்: புஜாராவுக்கு அஸ்வின் சவால்!

DIN


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொயீன் அலி பந்துவீச்சை புஜாரா தூக்கியடித்து விளையாடினால் பாதி மீசையுடன் மைதானத்துக்கு வருவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல்  9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோரை பேட்டியெடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அப்போது புஜாராவின் பேட்டிங் குறித்து இருவரும் பேசிக்கொண்டதாவது:

(புஜாராவை மிகவும் பாராட்டிப் பேசுகிறார் விக்ரம் ராத்தோர். புஜாராவை அடிக்கடி கிண்டல் செய்யும் அஸ்வின் இதற்குப் பதிலடி தரும் விதமாக...)

அஸ்வின்: நான் எப்போது புஜாராவுக்குப் பந்துவீசினாலும் அல்லது எதிராக விளையாடினாலும் என்னிடம் அவர் ஆட்டமிழந்துள்ளார். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம். நீங்கள் அவரை எவ்வளவு காப்பாற்றினாலும் இதுதான் உண்மை. நான் ஒன்று கேட்கிறேன். ஆஃப் ஸ்பின்னர் பந்துவீச்சை புஜாரா தூக்கியடிக்க வாய்ப்பு உண்டா? அதை நாங்கள் எப்போதாவது பார்க்க முடியுமா?

விக்ரம்: அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருமுறையாவது சுழற்பந்துவீச்சாளரின் பந்தைத் தூக்கியடித்து விளையாட வேண்டும் என நான் அவரை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் இதை இன்னும் ஏற்கவில்லை. ஒவ்வொரு முறையும் அபாரமான காரணங்களைக் கூறுகிறார். 

அஸ்வின்: ஒருவேளை இந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கிரீஸை விட்டு மேலே ஏறி வந்து மொயீன் அலி அல்லது வேறு ஏதாவது சுழற்பந்து வீச்சாளரின் பந்தை புஜாரா தூக்கியடித்தால் நான் என்னுடைய மீசையின் பாதியை எடுத்துவிட்டு வந்து மைதானத்தில் விளையாடுகிறேன். இது வெளிப்படையான சவால். 

விக்ரம்: இது அருமையான சவால். இதை அவர் ஏற்பார் என நினைக்கிறேன். இதுதொடர்பாக அவருடன் அருமையான உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. எல்லோரும் முன்னால் வந்து நின்று ஃபீல்டிங் செய்யும்போது நீங்கள் ஏன் பந்தைத் தூக்கியடிக்கக் கூடாது? ஒரே ஒரு ஷாட் மட்டுமே. இதனால் ஃபீல்டர் பின்னால் நகர்த்தப்படுவார். இதனால் நீங்கள் ஒரு ரன்னைச் சுலபமாக எடுக்கலாம் என்றேன். இதற்கு அவரிடம் அருமையான காரணம் உள்ளது. அவர் என்னிடம் சொன்னார், நான் அப்படிச் செய்து ஃபீல்டரை பின்னால் தள்ளினால், எனக்கு ஒரு ரன் தான் கிடைக்கும். ஆனால் இப்போது ஃபீல்டர்கள் முன்னால் நிற்கும்போது வீரர்களின் இடைவெளியில் ஷாட் அடித்து 2 அல்லது 3 ரன்களை எடுப்பேன். எனவே எது சிறந்தது எனக் கேட்பார். 

அஸ்வின்: இப்போது வேடிக்கையாகப் பேசியதைத் தவிர்த்துப் பார்த்தால் நானும் புஜாராவும் சிறந்த நண்பர்கள். புஜாராவின் எதிரி என என்னை எண்ணி விடாதீர்கள். அவரை வம்புக்கு இழுப்பது எனக்குப் பிடித்தமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT