செய்திகள்

381 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை: ரூட், பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப்

23rd Jan 2021 08:03 PM

ADVERTISEMENT


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 107 ரன்களுடனும், டிக்வெல்லா 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் மேத்யூஸ் கூடுதலாக 3 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 110 ரன்களுக்கு ஆண்டர்சன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

எனினும் டிக்வெல்லா மற்றும் தில்ருவன் பெரேரா பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிக்வெலா 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் பெரேரா அரைசதம் அடித்து கடைசி விக்கெட்டாக 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், சாம் கரண் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்த முறையும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸாக் கிராலே மற்றும் டொமினிக் சிப்ளே லசித் எம்புல்டேனியா சுழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கேப்டன் ஜோ ரூட் பாட்னர்ஷிப் அமைத்தனர். பேர்ஸ்டோவ் நிதானம் காட்ட ரூட் ஒருநாள் கிரிக்கெட் போல் பவுண்டரிகளாக அடித்து துரிதமாக அரைசதத்தை எட்டினார்.

இந்த இணை 2-வது நாள் ஆட்டநேர முடிவு வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 283 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

பேர்ஸ்டோவ் 24 ரன்களுடனும், ரூட் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Tags : root
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT