செய்திகள்

36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு விராட் கோலி நடத்திய நள்ளிரவுக் கூட்டம்: அஸ்வின் - ஸ்ரீதர் உரையாடல்

22nd Jan 2021 03:26 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. 4-வது டெஸ்டில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. 

இந்நிலையில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருடன் உரையாடிய விடியோவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். அப்போது இருவரும் பேசிக்கொண்டதாவது:

ADVERTISEMENT

அஸ்வின்: அடிலெய்ட் டெஸ்டில் 36 ரன்களில் ஆட் அவுட்  ஆன பிறகு பயங்கரமான கூட்டம் ஒன்று நடைபெற்றது. அடுத்த நாள் பயிற்சியெடுக்க ஆர்வமாக இருந்த வீரர்களை, பயிற்சியெடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். 

அடிலெய்ட் டெஸ்ட் முடிந்த பிறகு கல்லூரியில் நடைபெறும் பிரிவு உபசார விழா போல நான் கிளம்புகிறேன் என்று எங்களிடம் சொன்னார் கேப்டன் விராட் கோலி. ஊரில் அவருடைய மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் இந்தியாவுக்கு அவர் திரும்புகிறார். ஊருக்கெல்லாம் போக வேண்டாம், இப்போதுதான் 36-ல் ஆல் அவுட் ஆகியுள்ளோம் என எண்ணத் தோன்றியது. 

ஸ்ரீதர்: 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அன்றிரவு 12.30 மணிக்கு கோலி எனக்கு மெசேஜ் செய்தார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அந்த நேரத்தில் மெசேஜ் வந்தவுடன் நான் கதிகலங்கி போய்விட்டேன். பகலிரவு டெஸ்ட் என்பதால் அறைக்குச் செல்வதற்கே இரவு 9.30, 10 மணி ஆகிவிட்டது.

அஸ்வின்: அன்னிக்கு நாம டே நைட் எல்லாம் போகவில்லை. மதியமே டெஸ்ட் முடிந்துவிட்டது. (இருவரும் சிரிக்கிறார்கள்)

ஸ்ரீதர்: தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத், பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என கோலிக்குப் பதில் சொன்னேன். சரி, நானும் வருகிறேன் என்றார். அவர் வந்தவுடன் அடுத்த ஆட்டம் பற்றி விவாதித்தோம். மெல்போர்ன் திட்டம் அப்போதே ஆரம்பித்து விட்டது. ரவி சாஸ்திரி ஒன்று சொன்னார். இந்த 36-ஐ உங்கள் சட்டையில் பேட்ச்சாகக் குத்திக்கொள்ளுங்கள். இந்த 36 தான் இந்த அணியைச் சிறந்ததாக மாற்றும் என்றார். என்ன சொல்வது, அப்போது ஒன்றும் எங்களுக்குப் புரியவில்லை. அடுத்த நாள் காலையில் ரஹானேவையும் வைத்துப் பேசினோம். ஜடேஜா உடற்தகுதியடைந்து விட்டார். அது நல்லதாக இருந்தது. 

வழக்கமாக இதுபோன்ற சமயத்தில் எல்லா அணிகளும் பேட்டிங்கை பலமாக்குவார்கள். ரவி சாஸ்திரியும், கோலியும், ரஹானேவும் உட்கார்ந்து பேசி பந்துவீச்சைப் பலமாக்கலாம் என முடிவெடுத்தார்கள். இதனால் கோலிக்குப் பதிலாக ஜடேஜா அணிக்குள் வந்தார். அது ஒரு மாஸ்டர் ஸ்டிரோக். 

அஸ்வின்: 36-க்குப் பிறகு எல்லோரும் வெறியுடன் பயிற்சி பெற விரும்பியபோது ஏன் அதை ரத்து செய்தீர்கள்?

ஸ்ரீதர்: அது பரத்தின் யோசனை. வீரர்கள் அப்போது பயிற்சி எடுத்தால் வெறுப்புடன் ஈடுபடுவார்கள். அதிகமாக யோசித்து, அதிகமாக அலசுவார்கள். அது அவர்கள் மனநிலைக்கு உகந்தது அல்ல என்றார். அதனால் பயிற்சியை ரத்து செய்தோம். மேலாளரிடம் சொல்லி அன்றிரவு அனைவரும் ஒன்றாக உணவருந்த ஏற்பாடு செய்தோம். அப்போது சில விளையாட்டுகளை விளையாடலாம் என முடிவெடுத்தோம்.

அஸ்வின்: இந்த விளையாட்டுகளால் அணி வீரர்கள் உற்சாகமாகி, பாடல்களையெல்லாம் பாடிவிட்டு அறைக்குச் சென்றோம். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT