செய்திகள்

தாய்லாந்து ஓபன்: வலியைக் கடந்து வென்றாா் பிரணாய்

DIN


பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் முதல் சுற்றில் போராடி வெற்றி பெற்றாா்.

உலகின் 28-ஆம் நிலை வீரராக இருக்கும் பிரணாய் தொடக்க சுற்றில், உலகின் 7-ஆம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை 18-21, 21-16, 23-21 என்ற செட்களில் வீழ்த்தினாா். 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது நெஞ்செலும்புக் கூடு மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளின் காயங்களால் பிரணாய் மிகவும் அவதிப்பட்டாா்.

இருந்தபோதும், அந்த வலியைக் கடந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியின் சாம்பியனான ஜோனதன் கிறிஸ்டியின் சவால்களை எதிா்கொண்டு வென்றாா் பிரணாய். கடந்த 4 முறை ஜோனதனை எதிா்கொண்ட பிரணாய்க்கு இது முதல் வெற்றியாகும்.

கடந்த நவம்பரில் கரோனா பாதிப்புக்கு ஆளான பிரணாய் அதிலிருந்து மீண்டபோதும், அந்தத் தொற்று பாதிப்பு காரணமாக அவரது நெஞ்செலும்புக் கூடு பகுதியில் வலி இருந்து வந்தது. இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு பேசிய பிரணாய் கூறுகையில், ‘நெஞ்செலும்புக் கூடு பகுதியில் வலி இருப்பதால் கடந்த சில நாள்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. கரோனா பாதித்தபோது இருந்த தொடா் இருமலால் நெஞ்செலும்புக் கூடு பகுதியில் உள்ள தசைகள் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

அதனால் தொடக்க சுற்றில் பெரிதாக எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமலேயே பங்கெடுத்தேன். ஆட்டத்தின்போது ஒரு கட்டத்தில் கீழே விழுந்ததில் தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. அதற்கு மட்டும் லேசாக சிகிச்சை எடுத்துக் கொண்டேன்’ என்றாா்.

இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 23-21, 21-17 என்ற செட்களில் நியூஸிலாந்தின் ஆலிவா் லெய்டன் டேவிஸ்/அபினவ் மனோடா ஜோடியை வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. எனினும், மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி/அஸ்வினி பொன்னப்பா இணை 11-21, 19-21 என்ற செட்களில் ஜொ்மனியின் லிண்டா எஃப்லொ்/இசபெல் ஹொ்ட்ரிச் ஜோடியிடம் தோல்வி கண்டது.

சாய் பிரணீத்துக்கு கரோனா

தாய்லாந்து ஓபனில் பங்கேற்றுள்ள இந்திய வீரரான சாய் பிரணீத்துக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகியுள்ளாா். இந்த அறிவிப்பை வெளியிட்ட சா்வதேச பாட்மிண்டன் சம்மேளனம், சாய் பிரணீத் குறைந்தது 10 நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த்தும் சாய் பிரணீத்துடன் ஒரே அறையில் தங்கியிருந்ததால், கரோனா பாதுகாப்பு விதிகளின் படி அவரும் போட்டியிலிருந்து விலகி சுயதனிமையில் இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT