செய்திகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து சேலத்துக்குத் திரும்பும் நடராஜன்: தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

21st Jan 2021 04:12 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவிலிருந்து சேலத்துக்குத் திரும்பும் கிரிக்கெட் வீரர் நடராஜன், கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி 4-வது மற்றும் கடைசி டெஸ்டை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. 

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். 

ADVERTISEMENT

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். அதில் 58 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகின. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணினார்கள். எல்லோருடைய ஆசையும் நிறைவேறியுள்ளது. ஒன்றல்ல, மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி சாதனை செய்துள்ளார் நடராஜன்.

நடராஜன் வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு அவரை வரவேற்கத் தயாராக எதிர்பார்த்திருக்கும் உறவினர்கள்.

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார்.  இதன்பிறகு மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடினார். ஐபிஎல் போட்டியில் திறமையை நிரூபித்ததால் இந்திய அணி வீரராக முன்னேறியுள்ளார் நடராஜன். ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ஒரு ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளும் மூன்று டி20 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20 தொடரை இந்திய அணி வென்றது. தொடர் நாயகன் விருதைப் பெற்ற பாண்டியா, நடராஜன் இவ்விருதுக்குத் தகுதியானவர் என்று கூறி பாராட்டினார். 

மெல்போா்ன் டெஸ்டின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். இதனால் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த நடராஜன், இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானார். சிட்னி டெஸ்டில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவர்கள் இடம்பெறவில்லை. இதனால் 4-வது டெஸ்டில் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அவருடன் இணைந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

நடராஜன் வீட்டின் முன்பு வியாழக்கிழமை அவருடைய நண்பர்களால் அமைக்கப்படும் அவரது உருவம் பதித்த பேனர்.

ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை நடராஜன் பெற்றுள்ளார். 

ஐபிஎல் போட்டியின் போது நடராஜனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. எனினும் இதுவரை தன்னுடைய குழந்தையை நடராஜனால் பார்க்க முடியாத நிலை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு நேராக ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார் நடராஜன். அவருடைய இந்தத் தியாகத்துக்குக் கிடைத்த பரிசாக புதிய சாதனையை நிகழ்த்தினார். 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வென்றுள்ள இந்திய அணி இன்று நாடு திரும்பியுள்ளது. பிரிஸ்பேனிலிருந்து ரஹானே, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர், பிரித்வ் ஷா போன்றோர் மும்பைக்குச் சென்றார்கள். அங்கு, மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வீரர்களை வரவேற்றார்கள். பிரிஸ்பேனில் அசத்திய ரிஷப் பந்த், தில்லிக்குச் சென்றார். பிரிஸ்பேனிலிருந்து பெங்களூர் வந்த நடராஜன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்துக்குச் செல்கிறார். 

சேலம் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பாராட்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட பந்தல்களைக் காவல்துறையினர் இன்று அகற்றினார்கள்.

இந்நிலையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து நடராஜன் வந்துள்ளதால் கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது, குடும்ப உறுப்பினர்கள் தவிர வெளிநபர்களைச் சந்திக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடராஜனின் மனைவி பவித்ரா நடராஜனுக்கு வழங்குவதற்காக ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட மலர் கொத்து திரும்பி அனுப்பப்பட்டது.

மேலும் ஊருக்கு வரும் நடராஜனை ஊர்வலமாக அழைத்து வரக்கூடாது என்றும் ஊர் மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

Tags : Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT