செய்திகள்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் வரலாற்று வெற்றி: பிரதமர் வாழ்த்து

19th Jan 2021 01:49 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றியை நிகழ்த்தியுள்ள இந்திய அணிக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது பிசிசிஐ. இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.  

இந்நிலையில் இந்திய அணியின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும் உத்வேகமும் நன்குத் தெரிந்தது. வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார்கள். இந்திய அணிக்குப் பாராட்டுகள். அடுத்து விளையாடவுள்ள ஆட்டங்களுக்கு வாழ்த்துகள் என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT