செய்திகள்

பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியின் வெற்றிக்கு 15 ஓவரில் 69 ரன்கள் தேவை!

19th Jan 2021 12:15 PM

ADVERTISEMENT

 

5-வது நாளில் இந்திய அணி வெற்றி பெற கடைசி 15 ஓவர்களில் 69 ரன்கள் தேவை என்கிற நிலை உள்ளதால் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று, ரோஹித் சர்மா 7 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ஷுப்மன் கில்லும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். கில் விரைவாக ரன்கள் எடுக்க, தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் ஆஸி. பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார் புஜாரா. 90 பந்துகளில் அரை சதமெடுத்த ஷுப்மன் கில், சதம் அடிப்பார் என்கிற நம்பிக்கையை உருவாக்கினார். எனினும் 146 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார். 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

5-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 63 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 168 பந்துகளில் 43 ரன்களுடன் புஜாராவும் 23 பந்துகளில் 10 ரன்களுடன் ரிஷப் பந்தும் களத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரிஷப் பந்தின் ஆட்டத்தால் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஆஸி. அணிக்குப் பெரிய சவாலாக விளங்கிய புஜாரா 211 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களை எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. பந்த் 51, மயங்க் அகர்வால் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 69 ரன்கள் தேவை. இதனால் டெஸ்ட் முடிவை கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. 

Tags : Border Gavaskar Trophy Gabba
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT