செய்திகள்

உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியாது: தந்தையின் கனவை நிறைவேற்றிய சிராஜ்!

DIN


தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் தான் என்னுடைய கவனம் இருந்தது என 5 விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கூறியுள்ளார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை, ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை.

ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ். 4-ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் சிராஜ் கூறியதாவது:

டெஸ்ட் தொடரில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த ரஹானேவுக்கு நன்றி. என்னிடம் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் எனக்கு அதிக நம்பிக்கை உருவானது. 

தன் மகன் விளையாடுவதை உலகமே பார்க்கும் என என் தந்தை விரும்பினார். (5 விக்கெட்டுகள் எடுத்த) இந்த நாளைப் பார்க்க அவர் இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அவருடைய வாழ்த்துகளால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியாது. 

என் தந்தை இறந்த பிறகு சூழல் கடினமாக இருந்தது. என்னுடைய தாயாரிடம் பேசி வலிமையை அடைந்தேன். என்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் தான் என்னுடைய கவனம் இருந்தது. 

மூத்த பந்துவீச்சாளராக என்னை எண்ணிக்கொள்ள மாட்டேன். ஆனால் ஏராளமான உள்ளூர் மற்றும் இந்தியா ஏ ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். அது எனக்கு உதவியுள்ளது. பும்ரா டெஸ்டில் விளையாடாதது எனக்குப் பெரிய இழப்பாக இருந்தது. எனவே பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். எதிரணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தேன் என்றார். 

சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT