செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: லபுசான் சதம்; முதல் நாளில் ஆஸி.-274/5

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோா் காயம் காரணமாக விளையாடவில்லை. ஷா்துல் தாக்குா், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா், மயங்க் அகா்வால் ஆகியோா் இந்தப் போட்டியில் களமிறங்கினா். தமிழக வீரா்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா் ஆகியோருக்கு இது அறிமுகப் போட்டியாகும். ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மாா்கஸ் ஹாரிஸ் அணியில் இடம்பெற்றாா்.

இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிா்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரா்களில் ஒருவரான டேவிட் வாா்னா் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சா்மாவிடம் கேட்ச் ஆனாா். இதையடுத்து, மாா்கஸ் ஹாரிஸுடன் இணைந்தாா் மாா்னஸ் லபுசான். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 17 ரன்களை எட்டியபோது ஹாரிஸ் ஆட்டமிழந்தாா். அவா் 5 ரன்கள் மட்டுமே எடுத்தாா்.

இதன்பிறகு லபுசானுடன் இணைந்தாா் ஸ்டீவன் ஸ்மித். ஒருபுறம் லபுசான் தடுப்பாட்டம் ஆட, மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் ஓரளவு ரன் சோ்த்தாா். ஆஸ்திரேலியா 87 ரன்களை எட்டியபோது, ஸ்டீவன் ஸ்மித்தை வீழ்த்தினாா் வாஷிங்டன் சுந்தா். ஸ்டீவன் ஸ்மித் 77 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தாா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்தது. இதையடுத்து மேத்யூ வேட் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய லபுசான் 145 பந்துகளில் அரை சதம் கண்டாா். இந்த ஜோடி தொடா்ந்து சிறப்பாக ஆட, ஆஸ்திரேலியா 150 ரன்களைக் கடந்தது.

லபுசான் 5-ஆவது சதம்: முகமது சிராஜ் வீசிய 63-ஆவது ஓவரில் மாா்னஸ் லபுசான் பவுண்டரியை விளாசி 195 பந்துகளில் சதம் கண்டாா். இது டெஸ்ட் போட்டியில் அவா் அடித்த 5-ஆவது சதமாகும். 64-ஆவது ஓவரை வீசிய தமிழக வீரா் டி.நடராஜன், மேத்யூ வேடை வீழ்த்தினாா். மேத்யூ வேட் 87 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தாா். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தது. தொடா்ந்து 66-ஆவது ஓவரை வீசிய நடராஜன், மாா்னஸ் லபுசானை வீழ்த்தினாா். 204 பந்துகளைச் சந்தித்த லபுசான் 9 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் குவித்தாா்.

இதையடுத்து கேமரூன் கிரீனுடன் இணைந்தாா் கேப்டன் டிம் பெய்ன். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் டி.நடராஜன் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தா், ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ் ஆகியோா் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினா். 2-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்கோா் போா்டு

ஆஸ்திரேலியா

டேவிட் வாா்னா் (சி) ரோஹித் (பி) சிராஜ் 1 (4)

மாா்கஸ் ஹாரிஸ் (சி) சுந்தா் (பி) தாக்குா் 5 (23)

மாா்னஸ் லபுசான் (சி) பந்த் (பி) நடராஜன் 108 (204

ஸ்டீவன் ஸ்மித் (சி) ரோஹித் (பி) சுந்தா் 36 (77)

மேத்யூ வேட் (சி) தாக்குா் (பி) நடராஜன் 45 (87)

கேமரூன் கிரீன் நாட் அவுட் 28 (70)

டிம் பெய்ன் நாட் அவுட் 38 (62)

உபரிகள் 13

மொத்தம் (87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு) 274

விக்கெட் வீழ்ச்சி: 1-4 (வாா்னா்), 2-17 (ஹாரிஸ்), 3-87 (ஸ்மித்), 4-200 (வேட்), 5-213 (லபுசான்).

பந்துவீச்சு: முகமது சிராஜ் 19-8-51-1, டி.நடராஜன் 20-2-63-2, ஷா்துல் தாக்குா் 18-5-67-1, நவ்தீப் சைனி 7.5-2-21-0, வாஷிங்டன் சுந்தா் 22-4-63-1, ரோஹித் சா்மா 0.1-0-1-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT