பிரிஸ்பேன் டெஸ்டில் ஸ்லிப் பகுதியில் ரோஹித் சர்மா அட்டகாசமான கேட்ச்சால் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரித் பூம்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவர்களுக்குப் பதில் மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நட்ராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை வார்னர் தடுத்து ஆட முயற்சிக்க, பந்து ஸ்லிப் பகுதிக்குச் சென்றது.
2-வது ஸ்லிப்பிலிருந்த ரோஹித் சர்மா அதை டைவ் அடித்துப் பிடிக்க வார்னர் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரிஸும் 5 ரன்களுக்கு ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.
13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.