செய்திகள்

இந்திய அணியின் கையை விட்டு நழுவும் சிட்னி டெஸ்ட்: 197 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 103/2

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. 3-ம் நாள் முடிவில் அந்த அணி 197 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.  

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கில், புஜாரா தலா 50 ரன்கள் எடுத்தார்கள். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகிய மூவரும் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியுள்ளது. 

பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் காயம் ஏற்பட்டதால் வலி தாங்காமல் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் களமிறங்கவில்லை. ரிஷப் பந்துக்குப் பதிலாக சஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். ரிஷப் பந்துக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. 

ஜடேஜா பேட்டிங் செய்தபோது அவருடைய இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பேட்டிங் செய்தாலும், ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. ஜடேஜாவுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் ஃபீல்டிங் செய்தார். ஜடேஜாவுக்கும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்மித்

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதனால் சிட்னி டெஸ்ட் இந்திய அணியின் கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது.

தொடக்க வீரர்களான புகோவ்ஸ்கி 10 ரன்களில் சிராஜ் பந்துவீச்சிலும் வார்னர் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த லபுசான் - ஸ்மித் ஜோடி நன்கு விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

3-ம் நாள் முடிவில் 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. லபுசான் 47, ஸ்மித் 29 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். இந்திய அணி 3-ம் நாளில் மோசமாக விளையாடியதால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT