செய்திகள்

அஸ்வின், ஜடேஜாவுக்கு கேப்டன் ரஹானே புகழாரம்

6th Jan 2021 07:50 PM

ADVERTISEMENT


இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் அஜின்க்யா ரஹானே பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில் இந்தியக் கேப்டன் ரஹானே காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது வீரர்கள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் அவர் பேசியது:

"அஸ்வின் எப்போதுமே புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார். அவரிடம் நல்ல திறன்கள் உள்ளன. இருப்பினும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார். அதுதான் அஸ்வினை தலைசிறந்த வீரராக மாற்றுகிறது. அடுத்த 2 டெஸ்ட் ஆட்டங்களிலும் அவரது பணியை சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

ADVERTISEMENT

பேட்ஸ்மேனாக ஜடேஜா நிறைய மேம்பட்டுள்ளார். அணியின் பார்வையில் அது மிகப் பெரிய விஷயம். 7-வது வீரராகக் களமிறங்கும் பேட்ஸ்மேன் பேட்டிங்கில் பங்களிக்க முடியும் என்று தெரிந்தால், குறிப்பிடத்தக்க அந்த ரன்களை எடுப்பது எளிதாகிவிடும். பீல்டிங்கிலும் அவர் சிறப்பான கேட்ச்களைப் பிடிப்பதைப் பார்க்க முடியும். எனவே, அவர் அணியில் இணைந்திருப்பது நிறைய உதவுகிறது. 

ரோஹித் சர்மா வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவருக்கு 7, 8 அமர்வுகள் சிறப்பாக இருந்தன. எங்களுடைய டெஸ்ட் ஆட்டம் முடிந்தவுடன் அவர் மெல்போர்ன் வந்த கையோடு பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். 

சிட்னி வரலாற்றைப் பொறுத்தவரை அது மிகவும் நல்ல ஆடுகளம். எனவே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலேபோதும்.

ஆம், எங்களிடம் நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், நாதன் லயன் தரமான சுழற்பந்துவீச்சாளர். சிட்னியில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே, யாரையும் குறைத்து மதிப்பிட நினைக்கவில்லை."

Tags : rahane
ADVERTISEMENT
ADVERTISEMENT