செய்திகள்

செளரவ் கங்குலி உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?: மருத்துவமனை தகவல்

4th Jan 2021 04:55 PM

ADVERTISEMENT

 

பிசிசிஐ தலைவரும் இந்திய முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, புதன் கிழமை வீட்டுக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாக அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 

செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனைத் தொடா்ந்து அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதயத் தமனி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக மருத்துவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘செளரவ் கங்குலிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அது அகற்றப்பட்டு, அவா் இயற்கையாக சுவாசிக்கிறாா். அவரிடம் வழக்கமான இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது உள்ளிட்ட அடுத்த கட்ட சிகிச்சை குறித்து திங்கள்கிழமை முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தனா்.

சௌரவ் கங்குலிக்கு சனிக்கிழமை திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனைக்கு மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா், முதல்வா் மம்தா பானா்ஜி மற்றும் அமைச்சா்கள் நேரில் சென்று மருத்துவா்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தனா்

ADVERTISEMENT

பிரதமா் மோடி நலம் விசாரிப்பு: செளரவ் கங்குலி, அவரின் மனைவி டோனா கங்குலி ஆகியோரிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசினாா். அப்போது செளரவ் கங்குலியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவா், விரைந்து குணமடைய கங்குலிக்கு வாழ்த்துத் தெரிவித்தாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை பற்றி தனியார் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கங்குலி உடல்நிலை சீராக உள்ளதால் அடுத்தக்கட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையைத் தள்ளி வைப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ளது. தற்போது அவருக்கு நெஞ்சு வலி இல்லை. அடுத்தக்கட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அடுத்த சில நாள்களிலோ சில வாரங்கள் கழித்தோ நடைபெறும். நாளை மறுநாள் கங்குலி தனது வீட்டுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags : Sourav Ganguly January
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT