செய்திகள்

கரோனா அச்சுறுத்தல்: சிட்னி டெஸ்டில் 25% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி!

4th Jan 2021 03:38 PM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிட்னியில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்டுக்கு 25% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

3-ஆவது டெஸ்ட் நடைபெறும் சிட்னியின் கடற்கரைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், அந்நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிட்னி டெஸ்ட் நடைபெறும் மைதானத்தில் 25% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 50% அனுமதி வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போதைய மாறுதலால் ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்குப் பணம் திரும்ப அளிக்கப்படுகிறது. 

38,000 இருக்கைகள் கொண்ட சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் விளையாடும் 3-வது டெஸ்டுக்குத் தினமும் 9.500 ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். இதற்கு முன்பு, இரு அணிகளும் பங்கேற்ற இரு ஒருநாள், இரு டி20 ஆட்டங்கள் சிட்னியில் நடைபெற்றன. முதல் மூன்று ஆட்டங்களுக்கு ஒவ்வொரு முறையும் 18,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கடைசி டி20 ஆட்டத்துக்கு 30,000-க்கும் அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். 

ரசிகர்களின் எண்ணிக்கையை குறைத்தது பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது 

சிட்னி டெஸ்டைப் பாதுகாப்புடன் விளையாடுவதற்காக சில நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மைதானத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதின் மூலம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும் என்றார். 

Tags : India vs Australia 25 percent
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT