செய்திகள்

ரசிகரின் ஆர்வமிகுதியால் மெல்போர்னில் இந்திய வீரர்களுக்கு நேர்ந்துள்ள சிக்கல்!

2nd Jan 2021 01:53 PM

ADVERTISEMENT

 

ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், சைனி போன்றோர் சென்றார்கள். 

இந்நிலையில் அதே சமயத்தில் அங்கிருந்த நவால்தீப் சிங் என்கிற இந்திய கிரிக்கெட் ரசிகர், இந்திய வீரர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய உணவு பில்லைக் கட்டினார். இதையடுத்து உணவகத்தில் என்ன நடந்தது என்பதை அவர் ட்விட்டரில் விலாவாரியாகத் தெரிவித்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் நவால்தீப் சிங் தெரிவித்ததாவது:

நான் பில் கட்டியது இந்திய வீரர்களுக்குத் தெரியாது. என்னுடைய சூப்பர் ஸ்டார்களுக்கான சிறிய பங்களிப்பு. நான் தான் பில்லைக் கட்டினேன் எனத் தெரிந்தவுடன், அண்ணா காசு வாங்கிக்கோங்க, இல்லைனா நல்லா இருக்காது என என்னிடம் ரோஹித் சர்மா சொன்னார். என்னை அணைத்து நன்றி சொன்னார் ரிஷப் பந்த் என்றார். அவர் கட்டிய பில்லின் தொகை - ரூ. 6683. 

ரசிகருடைய இந்த ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. கரோனா தடுப்பு விதிமுறைகளை இந்திய வீரர்கள் மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைப்படி, விடுதியின் வெளிப்பகுதியில் மட்டுமே வீரர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் நவால்தீப் சிங் வெளியிட்ட விடியோவில், இந்திய வீரர்கள் விடுதியின் உள்ளே இருப்பது போலத் தெரிகிறது. மேலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளார்களா என கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை செய்யவுள்ளதாக அறியப்படுகிறது.

இந்த சர்ச்சையை அடுத்து ட்வீட் செய்த நவால்தீப் சிங், ரிஷப் பந்த் என்னை அணைக்கவில்லை. ஆர்வத்தினால் அவ்வாறு கூறிவிட்டேன். தவறுதலான தகவல்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Tags : Rohit Sharma bio-bubble breach
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT