செய்திகள்

இங்கிலாந்து 81/4: இந்தியா அபார பந்துவீச்சு!

24th Feb 2021 04:44 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் நாள் முதல் பகுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கவுள்ளன. முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

ADVERTISEMENT

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோவ், கிராவ்லி ஆகியோரும் இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார். 

பிங்க் பந்தில் விளையாடப்படும் இந்த டெஸ்டில் இந்திய அணி ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடக்க வீரர் டாம் சிப்லியும் பேர்ஸ்டோவும் ரன் எதுவும் எடுக்காமல் முறையே இஷாந்த் சர்மா மற்றும் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு தொடக்க வீரர் கிராவ்லி, கேப்டன் ரூட் நல்ல கூட்டணி அமைத்தார்கள். 68 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார் கிராவ்லி. எனினும் 17 ரன்கள் எடுத்த ரூட், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடி வந்த கிராவ்லியை 53 ரன்களில் வீழ்த்தினார் அக்‌ஷர் படேல்.

முதல் நாள் முதல் பகுதியில் (தேநீர் இடைவேளை) இங்கிலாந்து அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் போப் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 

Tags : 3rd Test pink ball
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT