செய்திகள்

விஜய் ஹசாரே போட்டி: தமிழக அணி படுதோல்வி!

22nd Feb 2021 05:32 PM

ADVERTISEMENT

 

தமிழகத்துக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியில் ஆந்திர அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது. இதனால் விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியையும் தமிழக அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஆந்திரத்தை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆந்திர அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ADVERTISEMENT

அந்த முடிவு சரியானது என்பது போல தமிழக அணி பேட்ஸ்மேன்களுக்கு ஆந்திர அணியின் பந்துவீச்சு அச்சுறுத்தலாக விளங்கியது. பாபா அபராஜித் 40, சோனு யாதவ் 37 ரன்கள் எடுத்தார்கள். இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தார்கள். இதனால் தமிழக அணி, 41.3 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆந்திரத்தின் ஸ்டீபன், சோயிப் முகமது கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.  

இந்த எளிதான இலக்கை 29.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆந்திர அணி. தொடக்க வீரர் அஸ்வின் ஹெப்பர், 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். 

சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் தமிழக அணி, ஆந்திரத்துக்கு எதிராகப் படுதோல்வி அடைந்திருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

Tags : Vijay Hazare Trophy Tamil Nadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT