செய்திகள்

விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா!

22nd Feb 2021 02:58 PM

ADVERTISEMENT

 

விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார் கேரளா மற்றும் சிஎஸ்கே வீரரான ராபின் உத்தப்பா.

2019-ல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு ராபின் உத்தப்பாவைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐக்கிய  அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடினார் ராபின் உத்தப்பா. 196 ரன்கள் எடுத்தார். ஒரு அரை சதமும் எடுக்கவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கேரள அணிக்காக 5 இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்தார் உத்தப்பா. மும்பை அணிக்கு எதிராக 54 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 213 ரன்கள் இலக்கை விரட்ட கேரள அணிக்கு உதவினார். 

ADVERTISEMENT

இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, புணே வாரியர்ஸ், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக உத்தப்பா விளையாடியுள்ளார். ராஜஸ்தான் அணியில் இருந்த உத்தப்பாவை சிஎஸ்கே  அணி அதே விலை கொடுத்து வாங்கியுள்ளது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இருந்த ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி உத்தப்பாவைத் தேர்வு செய்துள்ளது. 

2018,  2019, 2020 ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக 40 ஆட்டங்களில் விளையாடி இரு அரை சதம் மட்டுமே உத்தப்பா எடுத்துள்ளார். கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் 120-ஐ தாண்டவில்லை. இதனால் ராபின் உத்தப்பாவின் தேர்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே பல தொடக்க வீரர்கள் இருக்கிற நிலையில் மீண்டும் மற்றொரு மூத்த வீரரைத் தொடக்க வீரராகத் தேர்வு செய்வது ஏன் என்கிற கேள்வியையும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள். 

இந்நிலையில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் ராபின் உத்தப்பா, விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கேரளத்துக்காக ஒடிஷா அணிக்கு எதிராக 85 பந்துகளில் 107 ரன்களும் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக 55 பந்துகளில் 81 ரன்களும் எடுத்துள்ளார் உத்தப்பா.

இதனால் உத்தப்பாவின் ஆட்டத்தினால் கேரள ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இதே ஆட்டத்தை ஐபிஎல்-லிலும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கிறார்கள்.

Tags : Robin Uthappa Vijay Hazare Trophy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT