செய்திகள்

உணவு இடைவேளையில் இந்தியா 106/3: கோலி, ஷுப்மன் கில் டக் அவுட், ரோஹித் அபார ஆட்டம்!

13th Feb 2021 11:58 AM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்கள்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

ADVERTISEMENT

சென்னையில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்‌ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். புஜாராவை 21 ரன்களில் வீழ்த்தினார் ஜாக் லீச். இந்திய கேப்டன் விராட் கோலியை அற்புதமான பந்தால் போல்ட் ஆக்கினார் மொயீன் அலி. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக உள்ளதால் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ரோஹித் சர்மா விரைவாக ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.

இந்திய அணி, முதல் நாள் உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 78 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன்  80, ரஹானே 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT