செய்திகள்

உத்தரகண்ட் அணியில் சிக்கல்: மத ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மறுப்பு

11th Feb 2021 04:56 PM

ADVERTISEMENT

 

தன் மீதான மத ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் வீரரும் உத்தரகண்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியவருமான வாசிம் ஜாஃபர் மறுத்துள்ளார்,

இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள், 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வாசிம் ஜாஃபர், கடந்த வருடம் 42 வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதையடுத்து உத்தரகண்ட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் டி20 போட்டியில் உத்தரகண்ட் அணி, ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்தது. 

இதையடுத்து அணித்தேர்வில் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் வாசிம் ஜாஃபர். அணித்தேர்வில் தேர்வுக்குழுவினரும் செயலாளரும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

ADVERTISEMENT

உத்தரகண்ட் கிரிக்கெட் அணியின் செயலாளர் மஹிம் வர்மா, வாசிம் ஜாஃபரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம். வெளிமாநில வீரர்கள், பயிற்சியாளர்களின் தேர்விலும் அவர் சொன்னதைத்தான் செய்தோம். ஆனால் வீரர்களின் தேர்வில் அவருடைய தலையீடு அதிகமாக இருந்தது என்றார்.

இந்நிலையில் வாசிம் ஜாஃபர் மீது மத ரீதியிலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து இதற்கு விளக்கம் கொடுத்து வாசிம் ஜாஃபர் கூறியதாவது:

இதெல்லாம் தீவிரமான குற்றச்சாட்டுகள். அதனால் தான் என் பக்கமுள்ள நியாயத்தைக் கூறுகிறேன்.

என்னுடைய ராஜிநாமாவுக்கான காரணத்தை முன்பே கூறிவிட்டேன். அதில் இப்போதும் உறுதியாக உள்ளேன். இதற்கு மத ரீதியில் குறை சொல்வதும் அதற்கு நான் விளக்கம் அளிப்பதும் சோகமான நிகழ்வாகும். நீண்ட நாள் விளையாடி, இந்திய அணியிலும் பங்கேற்ற பிறகும், இதுபோன்ற சிறிய விஷயங்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. 

உத்தரகண்ட் அணியின் முழக்கத்தை நான் மாற்றியதாகக் குற்றம் சொல்கிறார்கள். ஜெய் ஹனுமான் என்று சொல்வதை கோ உத்தரகண்ட் என மாற்றினேன். ஏனெனில் அணியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள்.

பயிற்சி ஆட்டங்களின்போது மாதா ராணி கி ஜெய் என்பது அணி முழக்கமாக இருந்தது. சையத் முஷ்டாக் அலி போட்டிக்காக விளையாட பரோடா சென்றபோது நான் வீரர்களிடம் சொன்னேன், நாம் குறிப்பிட்ட மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. உத்தரகண்ட் மாநிலத்துக்காக விளையாடுகிறோம். எனவே கோ உத்தரகண்ட் அல்லது லெட்ஸ் டூ இட் ஃபார் உத்தரகண்ட் என்பது அணியின் முழக்கமாக இருக்க வேண்டும் என்றேன். விதர்பா அணியில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், கமான் விதர்பா என்று முழக்கமிடச் சொல்வார். அதனால் தான் அப்படிச் சொன்னேன். இதைப் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில் மைதானத்தில் நீங்கள் தான் இதைக் கூறுகிறீர்கள் என்று வீரர்களிடம் கூறினேன். இதை மத ரீதியாக மாற்ற முயன்றிருந்தால், இஸ்லாமிய முழக்கம் எதையாவது சொல்லச் சொல்லியிருப்பேன். மத ரீதியிலான முழக்கம் வேண்டாம் என்றுதான் வீரர்களிடம் சொன்னேன்.

இக்பால் அப்துல்லாவுக்கு ஆதரவாக நான் நடந்துகொண்டதாகவும் அவரை கேப்டன் ஆக்க முயன்றதாகவும் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. ஜெய் பிஸ்டாவை கேப்டனாக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் ரிஸ்வான் சம்ஷத் மற்றும் இதர தேர்வுக்குழுவினர் என்னிடம், நீங்கள் இக்பால் அப்துல்லாவை கேப்டன் ஆக்குங்கள், அவர் தான் மூத்த வீரர் என்றார்கள். அவர்களுடைய யோசனையை நான் ஏற்றுக்கொண்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். 

Tags : Wasim Jaffer Uttarakhand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT