பெங்களூரு: உத்தரகண்ட் கிரிக்கெட் சங்க அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த விவகாரத்தில் வாசிம் ஜாஃபருக்கு முன்னாள் கேப்டன் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள், 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வாசிம் ஜாஃபர், கடந்த வருடம் 42 வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதையடுத்து உத்தரகண்ட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் டி20 போட்டியில் உத்தரகண்ட் அணி, ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்தது.
இதையடுத்து அணித்தேர்வில் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் வாசிம் ஜாஃபர். அணித்தேர்வில் தேர்வுக்குழுவினரும் செயலாளரும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
உத்தரகண்ட் கிரிக்கெட் அணியின் செயலாளர் மஹிம் வர்மா, வாசிம் ஜாஃபரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம். வெளிமாநில வீரர்கள், பயிற்சியாளர்களின் தேர்விலும் அவர் சொன்னதைத்தான் செய்தோம். ஆனால் வீரர்களின் தேர்வில் அவருடைய தலையீடு அதிகமாக இருந்தது என்றார். அத்துடன் வாசிம் ஜாஃபர் மீது மத ரீதியிலான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள காரணத்தால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் ராஜிநாமா செய்த விவகாரத்தில் வாசிம் ஜாஃபருக்கு முன்னாள் கேப்டன் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சரியான முடிவை எடுத்துள்ளீர்கள் வாசிம். நான் உங்களுடன் இருக்கிறேன், எதிர்பாரதவிதமாக நமது வீரர்கள் உங்களது வழிகாட்டுதலை மிஸ் செய்வார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.