செய்திகள்

ஜோ ரூட் இரட்டைச் சதம்: 555/8 ரன்களைக் குவித்துள்ள இங்கிலாந்து அணி

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட், இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 128 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சேப்பாக்கம் ஆடுகளம் இன்றும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் கவலையின்றி விளையாடினார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களான ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும். சில கேட்சுகளை இந்திய வீரர்கள் நழுவவிட்டாலும் ரன்கள் குவிப்பதில் சிரமம் எதுவும் அவர்களுக்கு ஏற்படவில்லை. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 260 பந்துகளில் ஜோ ரூட், 150 ரன்களை எட்டினார். கடந்த மூன்று டெஸ்டுகளிலும் அவர் 150 ரன்களைக் கடந்து சாதனை செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ், 73 பந்துகளில் அரை சதம் எட்டினார். 2 சிக்ஸர்களையும் அவர் அடித்தார்.

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 119 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகும் விரைவாக ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ், நதீம் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 195 ரன்களில் இருந்தபோது அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து இரட்டைச் சதம் எடுத்தார். 341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். 

ரூட் - ஸ்டோக்ஸ்

இது ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும். கேப்டனாக 3-வது இரட்டைச் சதம். 100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். இலங்கையில் இரட்டைச் சதம் எடுத்த ரூட், இந்தியாவிலும் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இதனால் 23 நாள்களில் இரு இரட்டைச் சதம் எடுத்து மகத்தான வீரராக விளங்குகிறார். 

இங்கிலாந்து அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 147 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்தது. ரூட் 209, போப் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஒல்லி போப் 34 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 218 ரன்கள் எடுத்த பிறகு நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஜோ ரூட். இதன்பிறகு 5 பவுண்டரிகள் அடித்த பட்லர், 30 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே ஆர்ச்சரும் போல்ட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு இந்திய அணிக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. 

2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 180 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பெஸ் 28, ஜாக் லீச் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT