செய்திகள்

வெற்றிக்குத் தேவை 3 விக்கெட்டுகள்: செஞ்சுரியன் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

30th Dec 2021 03:49 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 5-ம் நாள் உணவு இடைவேளையில் தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றது. 

ADVERTISEMENT

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தெ.ஆ. அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் தெ.ஆ. அணி, 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க பேட்டர்களான டீன் எல்கரும் பவுமாவும் பெரிய சவாலாக இருந்தார்கள். எல்கர் அளித்த ஒரு கேட்ச்சை பந்துவீசிய ஷமி தவறவிட்டார். 156 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் எடுத்த எல்கரை எல்பிடபிள்யூ செய்து வீழ்த்தினார் பும்ரா. 10 ஓவர்களுக்குப் பிறகு விக்கெட் விழுந்ததால் இந்திய ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள். அடுத்து வந்த டி காக் விரைவாக ரன்கள் எடுக்க முயன்றார். அவரை அற்புதமான பந்துவீச்சினால் போல்ட் செய்தார் சிராஜ். வியான் முல்டர் 1 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளையில் தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. டெம்பா பவுமா 78 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களுடனும் ஜேன்சன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற மூன்று விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 123 ரன்களும் தேவைப்படுகின்றன. மழை வேறு மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு நினைத்த வெற்றி கிடைக்குமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT