செய்திகள்

கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்

30th Dec 2021 03:26 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் மூன்று பயிற்சியாளர்கள், நான்கு குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். போட்டி நடுவரும் முன்னாள் ஆஸி. வீரருமான டேவிட் பூன், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜனவரி 5 அன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் டேவிட் பூன் பணியாற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் பெர்னார்ட், போட்டி நடுவராக சிட்னி டெஸ்டில் பணியாற்றவுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துப் பயிற்சியாளர் ஜான் லூயிஸ், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜீதன் படேல், உடற்பயிற்சி நிபுணர் டேரன் வெண்டஸ் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த காரணத்துக்காக இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் 4-வது டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக கிரஹாம் தோர்ப், சில்வர்வுட்டின் பணிகளை மேற்கொள்வார். இரு அணி வீரர்களுக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு அனைவரும் தனி விமானத்தில் சிட்னிக்கு நாளை செல்லவுள்ளார்கள். 

Tags : Ashes
ADVERTISEMENT
ADVERTISEMENT