லெய்செஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி தனது 2-ஆவது தோல்வியை சந்தித்தது.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற லெய்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. பிரீமியர் லீக் போட்டி பாதி கட்டத்தை தாண்டிவிட்டாலும், இந்த நிலையில் லிவர்பூல் சந்தித்திருக்கும் இரண்டாவது தோல்வி அந்த அணியின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.
தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 19 ஆட்டங்களில் 12 வெற்றிகளை பதிவு செய்து 41 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணி, பிரன்ட்ஃபோர்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில், பட்டியலில் முதலிடத்துடன் அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும்.
முன்னதாக லெய்செஸ்டருக்கு எதிரான ஆட்டத்தில் 16-ஆவது நிமிஷத்தில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் அணியின் பிரதான வீரர் முகமது சலா கோலடிக்க முயல, லெய்செஸ்டர் கோல்கீப்பர் கேஸ்பர் ஷ்மைகேல் அதைத் திறம்பட தடுத்தார். இதுவரை மொத்தமாக தொடர்ந்து 16 பெனால்டி வாய்ப்புகளில் கோலடித்த சலா, முதல் முறையாக அத்தகைய வாய்ப்பில் கோலடிக்கத் தவறியிருக்கிறார்.
லெய்செஸ்டர் அணிக்காக அதன் சப்ஸ்டிடியூட் வீரர் அடிமோலா லுக்மேன் 59-ஆவது நிமிஷத்தில் அருமையாக கோலடித்தார்.
செளதாம்டன் - டோட்டன்ஹாம் டிரா
செளதாம்டன் - டோட்டன்ஹாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் செளதாம்டனுக்காக ஜேம்ஸ் வார்டு புரோவ்ஸ் 25-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, டோட்டன்ஹாமுக்காக ஹேரி கேன் 41-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்தார். ஆட்டத்தின் 39-ஆவது நிமிஷத்தில் டோட்டன்ஹாம் வீரர் சன் ஹியூங் மின்னை தள்ளிவிட்டதற்காக செளதாம்டன் வீரர் முகமது சலிசுவுக்கு 2-ஆவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து செளதாம்டன் 10 பேருடன் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கிரிஸ்டல் பேலஸ் வெற்றி
நார்விச் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இத்துடன் 19 ஆட்டங்களில் 13-ஆவது தோல்வியை பதிவு செய்திருக்கும் நார்விச், 10 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் (20) இருக்கிறது. அந்த அணி தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. கிரிஸ்டல் பேலஸ் 19 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பெற்று, 23 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸூக்காக ஆட்சோன் எட்வர்டு (8'), ஜீன் ஃபிலிப் மடிடா (38'), ஜெஃப்ரி ஷ்லப் (42') ஆகியோர் கோலடித்தனர்.
வீழ்ந்தது வாட்ஃபோர்டு
வெஸ்ட் ஹாமுக்கு எதிரான ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது வாட்ஃபோர்டு. இந்த ஆட்டத்தில் வாட்ஃபோர்டுக்காக இமானுவல் போனாவென்சர் (4') கோலடிக்க, வெஸ்ட் ஹாமுக்காக தாமஸ் செளசெக் (27'), சயீது பென்ராமா (29'), மார்க் நோபல் (58'), நிகோலா லாசிச் (90+2) ஆகியோர் ஸ்கோர் செய்தனர். பட்டியலில் வெஸ்ட்ஹாம், 9 வெற்றிகளை பதிவு செய்து 31 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. வாட்ஃபோல்டு 4 வெற்றிகளில் பெற்ற 13 புள்ளிகளுடன் 17-ஆவது இடத்தில் உள்ளது.
1
லீக் ஆட்டங்களில் லிவர்பூல் அணிக்கு எதிராக லெய்செஸ்டர் அணி தொடர்ந்து வெற்றியை பதிவு செய்வது, கடந்த 1999 ஏப்ரலுக்குப் பிறகு இது முதல் முறையாகும்.
30
பிரீமியர் லீக் ஆட்டங்களில் தொடர்ந்து 29 ஆட்டங்களில் கோலடித்திருக்கும் லிவர்பூல், இந்த 30-ஆவது ஆட்டத்தில் கோலடிக்கத் தவறியுள்ளது.
6
2021-22 பிரீமியர் லீக் போட்டியில் செளதாம்டன் அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் ஆட்டத்தை டிரா செய்வது இது 6-ஆவது முறையாகும்.
8
நார்விச் அணி நடப்பு சீசனில் இதுவரை 8 கோல்களே அடித்து, கடந்த 1977-78 சீசனில் லெய்செஸ்டர் சிட்டி 19 ஆட்டங்களில் அடித்திருந்த மிகக் குறைந்த கோல் கணக்கை சமன் செய்துள்ளது.