செய்திகள்

உலக ரேபிட் செஸ்: கோனெரு ஹம்பிக்கு 6-ஆம் இடம்

30th Dec 2021 04:40 AM

ADVERTISEMENT


வார்சா: உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்புச் சாம்பியனாக இருந்தவரும், இந்தியாவைச் சேர்ந்தவருமான கோனெரு ஹம்பி மகளிர் பிரிவில் 7.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தார். ஓபன் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் 9 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தார். 
மகளிர் பிரிவில் ஆர்.வைஷாலி 7 புள்ளிகளுடன் 14-ஆவது இடமும், வந்திகா அகர்வால் 6 புள்ளிகளுடன் 38-ஆவது இடமும், பத்மினி ரெளத் 5.5 புள்ளிகளுடன் 49-ஆவது இடமும் பிடித்தனர். இப்பிரிவில் ரஷியாவின் அலக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் 7 வெற்றி, 4 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார். கஜகஸ்தானின் பிபிசரா அசெளபுயேவா 2-ஆம் இடமும், ரஷியாவின் வாலென்டினா குனினா 3-ஆம் இடமும் பிடித்தனர். 
ஓபன் பிரிவில் மித்ரபா குஹா 8.5 புள்ளிகளுடன் 15-ஆவது இடம் பிடிக்க, விதித் குஜராத்தி 7.5 புள்ளிகளுடன் 45-ஆவது இடமும், ஹரீஷ் பாரதகோடி 7 புள்ளிகளுடன் 60-ஆவது இடமும் பிடித்தனர். ஹரி கிருஷ்ணா 6.5 புள்ளிகளுடன் 99-ஆவது இடம் பிடித்தார். இப்பிரிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாதோரோவ், டை பிரேக்கரில் சாம்பியன் ஆனார். ரஷியாவின் இயான் நெபோம்னியாட்சி வெள்ளியும், நார்வே வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சென் வெண்கலமும் வென்றனர். 
முன்னதாக, மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, கடைசி நாள் ஆட்டத்தை ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக்குடன் டிரா செய்து தொடங்கினார். பின்னர் பல்கேரியாவின் அன்டாவ்னெடா ஸ்டெஃபானோவா, அஸர்பைஜானின் குல்னார் மமாடோவா ஆகியோருடனான அவரது ஆட்டமும் டிரா ஆனது. ஓபன் பிரிவில் குகேஷ் தனது 10-ஆவது சுற்றில் இஸ்ரேலின் போரில் கெல்ஃபாண்டை வீழ்த்த, அடுத்த சுற்றில் ஜார்ஜியாவின் ஜோபாவா பாதுரை தோற்கடித்தார். பின்னர் தனது கடைசி இரு சுற்றுகளை உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாதோரோவ், ரஷியாவின் அலெக்ஸாண்டர் கிரிஷுக் ஆகியோருடன் டிரா செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT