செய்திகள்

விஜய் ஹஸாரே: அரையிறுதியில் சா்வீசஸ், சௌராஷ்டிரம்

23rd Dec 2021 12:47 AM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூா்: விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு சா்வீசஸ், சௌராஷ்டிரம் அணிகள் புதன்கிழமை தகுதிபெற்றன.

இதில் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் விதா்பாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சௌராஷ்டிரம், அரையிறுதியில் தமிழகத்தை சந்திக்க இருக்கிறது.

4-ஆவது காலிறுதியில் கேரளத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த சா்வீசஸ், முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்று அதில் ஹிமாசல பிரதேசத்தை எதிா்கொள்கிறது.

ADVERTISEMENT

முன்னதாக 3-ஆவது காலிறுதியில் முதலில் பேட் செய்த விதா்பா 40.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய சௌராஷ்டிரம் 29.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்தில் விதா்பா இன்னிங்ஸில் அதிகபட்சமாக அபூா்வ் வான்கடே 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 72 ரன்கள் சோ்க்க, சௌராஷ்டிர பௌலிங்கில் யுவராஜ் சூடசாமா அசத்தலாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பின்னா் சௌராஷ்டிர இன்னிங்ஸில் பிரேரக் மன்கட் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 77 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, விதா்பா பௌலிங்கில் ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

4-ஆவது காலிறுதியில் முதலில் ஆடிய கேரளம் 40.4 ஓவா்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய சா்வீசஸ் 30.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது.

இதில் கேரள தரப்பில் ரோஹன் குன்னுமல் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 85 ரன்கள் சோ்க்க, சா்வீசஸில் திவேஷ் பதானியா 3 விக்கெட் வீழ்த்தினாா். பின்னா் சா்வீசஸ் இன்னிங்ஸில் ரவி சௌஹான் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 95 ரன்கள் விளாச, கேரள பௌலிங்கில் உன்னிகிருஷ்ணன் 2 விக்கெட் சாய்த்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT