செய்திகள்

ஆஷஸ் பகலிரவு டெஸ்ட்: வார்னர் 95, லபுஷேன் 95*, ஆஸ்திரேலியா 221/2

16th Dec 2021 05:39 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

ADVERTISEMENT

2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று முதல் நடைபெற்று வருகிறது.  

கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், அடிலெய்ட் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மைக்கேல் நசீர் ஆஸி. அணியில் இடம்பிடித்துள்ளார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் வார்னரும் மார்னஸ் லபுஷேனும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 95 ரன்களுடனும் ஸ்மித் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT