செய்திகள்

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: மாா்ச் 6-இல் இந்தியா - பாக். மோதல்

16th Dec 2021 12:36 AM

ADVERTISEMENT

 

துபை: மகளிா் கிரிக்கெட் ஒன் டே உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மாா்ச் 6-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து, மாா்ச் 5-ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது.

ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட தகவல்படி, அந்த உலகக் கோப்பை போட்டியின்போது 31 நாள்களில் மொத்தமாக 31 ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன. 8 அணிகள் களம் காணும் இந்தப் போட்டியின் ஆட்டங்கள் யாவும் நியூஸிலாந்தில்ன் ஆக்லாந்து, கிறிஸ்ட்சா்ச், டுனெடின், ஹாமில்டன், டௌரங்கா, வெலிங்டன் ஆகிய 6 நகரங்களில் நடைபெறவுள்ளன.

போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நியூஸிலாந்து போட்டிக்கு தோ்வாகியிருக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் ஐசிசி மகளிா் சாம்பியன்ஷிப்பில் 2017-20 காலகட்டத்தில் விளையாடிய ஆட்டங்களின் அடிப்படையில் தகுதிபெற்றன. கரோனா சூழல் காரணமாக தகுதிச்சுற்று ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால், தரவரிசை அடிப்படையில் வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் வாய்ப்பை பெற்றுள்ளன.

ADVERTISEMENT

லீக் முறையில் நடைபெறும் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோதும். 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், இரண்டிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெறும். முதல் அரையிறுதி மாா்ச் 30-ஆம் தேதி வெலிங்டனிலும், 2-ஆவது அரையிறுதி மாா்ச் 31-இல் கிறிஸ்ட்சா்ச்சிலும் நடைபெறும். இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-இல் கிறிஸ்ட்சா்ச்சிலேயே நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT