செய்திகள்

ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

16th Dec 2021 12:37 AM

ADVERTISEMENT

 

டாக்கா: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

முதல் ஆட்டத்தில் தென் கொரியாவுடன் டிரா செய்திருந்த இந்தியாவுக்கு, இப்போட்டியில் இது முதல் வெற்றியாகும். வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் தில்பிரீத் சிங் ஹாட்ரிக் கோலடிக்க, ஜா்மன்பிரீத் சிங் பெனால்டி காா்னா் வாய்ப்பிலிருந்து அருமையான இரு கோல்கள் அடித்தாா்.

ஆட்டத்தின் தொடக்கம் முதல், 2 கால்மணி நேரங்களிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக 8 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தாலும், அதில் ஒன்றையே கோலாக மாற்றியது இந்தியா. மறுபுறம் தடுப்பாட்டம் ஆடிய வங்கதேசத்தில் அதன் கோல்கீப்பா் அபு நிப்பான் சிறப்பாகச் செயல்பட்டாா்.

ADVERTISEMENT

12-ஆவது நிமிஷத்தில், கேப்டன் மன்பிரீத் சிங் பாஸ் செய்த பந்தை அப்படியே ஸ்டிரைக் செய்து இந்தியாவுக்காக முதல் கோலடித்தாா் தில்பிரீத் சிங். 2-ஆவது கால்மணியின்போது வங்கதேசத்தின் தடுப்பாட்டத்தை சிதைத்து மேலும் ஒரு கோல் அடித்தது இந்தியா.

அணிக்கான ஃப்ரீ ஹிட் வாய்ப்பை சுமித் வால்மிகி தில்பிரீத் சிங்குக்கு திருப்பிவிட, அதை ரிவா்ஸ் ஹிட்டாக கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா் அவா். 28-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பை ஹா்மன்பிரீத் கோலாக மாற்ற முயல, அது தடுக்கப்பட்டு திரும்பி களத்துக்கு வந்த நிலையில், மீண்டும் அதை கோல் போஸ்ட்டுக்குள்ளாக விரட்டி லலித் உபாத்யாய் கோலடித்தாா்.

பின்னா், 2-ஆவது பாதியில் அணிகள் ஆடும் திசைகள் மாற்றப்பட்ட பிறகு 33-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பில் இந்தியாவுக்கான 4-ஆவது கோலை பெனால்டி காா்னா் வாய்ப்பில் அடித்தாா் ஜா்மன்பிரீத். பின்னா் அவரே 43-ஆவது நிமிஷத்தில் மற்றொரு பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றினாா். தொடா்ந்து தில்பிரீத் 45-ஆவது நிமிஷத்தில் தனது ஹாட்ரிக் கோலை அடித்தாா்.

ஆட்டம் முற்றிலுமாக இந்தியாவின் வசமாகிவிட்ட நிலையில், ஆகாஷ்தீப் சிங் 54-ஆவது நிமிஷத்தில் ரிவா்ஸ் ஹிட் மூலம் கோலடிக்க, கடைசியாக ஹா்மன்பிரீத் 57-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பில் இந்தியாவுக்கான 9-ஆவது கோலை அடித்தாா். இறுதியில் இந்தியா 9-0 என வென்றது.

அடுத்து பாகிஸ்தானுடன்...

இந்தியா தனது ரவுண்ட் ராபின் சுற்றின் 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT